கோழி கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்

அறந்தாங்கியில் கோழி கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-26 18:40 GMT

அறந்தாங்கி:

கோழி கழிவுகள்

அறந்தாங்கி பகுதியில் உள்ள கோழி கடைகளில் தேங்கும் கோழி கழிவுகளை மொத்தமாக ஒரு வாகனத்தில் அள்ளி கொண்டு புதுக்கோட்டை சாலைக்கு கொண்டு வந்து விடுகின்றனர். பின்னர் அங்கு தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் சார்பில் வரும் ஒரு வாகனத்தில் இந்த கோழி கழிவுகளை மாற்றி கொண்டு கோழி கழிவுகள் தூத்துக்குடி கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில் கோழி கழிவுகள் கொண்டு செல்ல தனியார் நிறுவனம் சார்பில் வரும் வாகனம் வரவில்லை என்றால் கோழி கழிவுகள் அனைத்தையும் சாலையின் ஓரத்தில் கொட்டிவிட்டு செல்கின்றனர். மேலும் வாகனத்தில் ஏற்ற முடியாத அளவிற்கு அதிக படியான கழிவுகள் இருந்தாலும் கீழே கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர்.

சாலை மறியல்

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கோழி கழிவுகளை அப்பகுதியில் கொட்டக் கூடாது என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோழி கழிவுகளை வாகனத்தில் இருந்து மாற்றம் செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்