"பதவி விலகிவிட்டு அரசியல் பேசுங்கள்": கவர்னருக்கு தி.மு.க. பதிலடி

“தமிழ்நாட்டில் ஆரியர், திராவிடர் என ஒன்றும் கிடையாது” என்று கவர்னர் பரபரப்பாக பேசி இருக்கிறார். அதற்கு தி.மு.க. பதிலடியாக, “பதவி விலகிவிட்டு அரசியல் பேசுங்கள்” என்று கூறி இருக்கிறது.

Update: 2023-10-25 08:44 GMT

சென்னை:

மருது சகோதரர்கள் நினைவு தினவிழா, சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கும், சமூக சேவகர்களுக்கும் விருது வழங்கும் விழா திருச்சி தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமியில் நடந்தது.

விழாவுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி, 20 பேருக்கு விருதுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மிகச்சிறிய மாநிலமான நாகாலாந்தில், 1,000-க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் இருந்துள்ளனர். இதனால் சுதந்திர போராட்டத்துக்கு அடித்தளமிட்ட தமிழகத்தில் ஏராளமானோர் இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

மறைக்கப்பட்டனர்

2 ஆண்டுகளுக்கு முன்பு நான் தமிழகம் வந்தபோது, தமிழக அரசிடம் நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களின் பெயர் பட்டியலை கேட்டேன். அவர்கள் கொடுத்த பட்டியலில் 40 பேர் பெயர்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தன.

சுதந்திர போராட்ட வரலாற்றில், தமிழகத்தை சேர்ந்த பலர் மறைக்கப்பட்டு இருப்பதும், மறக்கடிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. ஆட்சி, அதிகாரத்தில் இருந்தவர்கள், தேசிய சுதந்திர இயக்கம் பற்றியும், சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றியும் பேச முன்வரவில்லை. சுதந்திர போராட்ட வீரரான முத்துராமலிங்க தேவர், நேதாஜியிடம் நெருக்கமாக இருந்தார். ஆனால், அவர் சாதி தலைவராக சுருக்கப்பட்டுவிட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கையில் நடந்த ஒரு சிறிய கலவரத்தை தொடர்ந்து இன்றுவரை அக்டோபர் 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மக்கள் இயல்பாக நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருது சகோதரர்களின் தியாகம் மக்களால் கொண்டாடக்கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள். தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள், மருது சகோதரர்கள் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை, வேண்டுமென்றே மறக்கடிக்க செய்துள்ளனர்.

ஒரு அரசியல் கட்சி தலைவரின் நினைவு தினம், பிறந்த தினம் என்றால் இப்படி இவர்களால் தடைபோட முடியுமா? பள்ளி பாடப்புத்தகங்களில் சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த வரலாற்றை நீக்க அரசு முயற்சிக்கிறது. இதன் காரணமாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அவர்கள் சார்ந்த சமுதாயத்தினர் கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால், சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவு நாளை கொண்டாடுவது, சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மாறி உள்ளது.

புகைப்பட கண்காட்சி

இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டாம், சுதந்திரம் கிடைத்த நாள் கருப்பு நாள் என்று கூறியவர்கள் தமிழகத்தில் இருந்தனர். இந்தியாவை பிரித்தாளும் திட்டத்தை செயல்படுத்திய இங்கிலாந்துக்கு பலர் உதவிக்கரமாக இருந்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியின்போது, அவரது நினைவிடத்துக்கு சென்றிருந்தேன். அங்கு நடந்த புகைப்பட கண்காட்சியில் காந்தியடிகள் தமிழகத்துக்கு 18 முறை வந்தது குறித்த படங்கள் இடம்பெற்று இருந்தன. அதில் திராவிட இயக்க கருத்தியலை கொண்ட ஒருவர் படம் கூட இல்லை என்பதால் இந்த ஆண்டு புகைப்பட கண்காட்சி நடக்கவில்லை.

சாதி தலைவர்கள்

திராவிட கொள்கைகள் தொடர்பான ஆய்வுகள், பெரும்பாலும், ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்படாமல், பிரசாரமாகவே இருக்கின்றன. மருது சகோதரர்கள், முத்துராமலிங்க தேவர் போன்றவர்கள் சாதி தலைவர்களாக சித்தரிக்கப்படுவதை பார்க்கும்போது, காந்தி, பட்டேல், பகத்சிங் உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் தமிழகத்தில் பிறந்து இருந்தால் அவர்களையும் சாதி தலைவர்களாக மாற்றி இருப்பார்கள்.

லண்டனில் பள்ளி படிப்பை பாதியில் விட்ட 17 வயது பிரிட்டிஷ் சிறுவன்தான் ராபர்ட் கால்டுவெல். அவர்தான் ஆரியர், திராவிடர் என்ற பாகுபாட்டை ஏற்படுத்தினார். அவரைத்தான் திராவிட கருத்தியலின் தந்தை என்று இவர்கள் போற்றுகின்றனர். இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே ராபர்ட் கால்டுவெல் போன்றவர்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஆரியர், திராவிடர் கிடையாது

தமிழகம் ஒரு புண்ணிய பூமி. தமிழகத்தில் ஆரியர், திராவிடர் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது.

சுதந்திர போராட்டத்துக்கான முதல் பிரகடனத்தை வெளியிட்டு, அதை ஸ்ரீரங்கம் கோவிலில் ஒட்டிய மருது சகோதரர்களுக்கு அரசு விழா எடுக்காததால் அவர்கள் சார்ந்த சாதி சங்கங்கள் விழா எடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுதந்திர போராட்ட வீரர்களின் உண்மை சம்பவங்களை வெளிக்கொணர ஆராய்ச்சி மாணவர்கள் யாரும் ஆய்வு செய்ய முன்வருவதில்லை. அது எனக்கு வருத்தமாக உள்ளது.

`எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு' என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். அதன்படி, சுதந்திரம் கிடைக்க தியாகம் செய்தவர்களை எந்த நாளும் மறக்கக்கூடாது. பாரதியார், வ.உ.சி., மருது சகோதரர்கள் போன்றவர்கள் வாழ்ந்த தமிழ்நாடு ஒரு புண்ணியபூமி. இனி, மருது சகோதரர்கள் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி, அவர்களின் தியாகங்களை பற்றி நீங்களும் எடுத்துச்சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

தி.மு.க. பதிலடி

ஏற்கனவே தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. கவர்னரின் இந்த பேச்சு அதற்கு மேலும் தூபம் போட்டு இருக்கிறது.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவருமான டி.ஆர்.பாலு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைந்த தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய 'நீட்' விலக்கு சட்டமுன்வடிவு உள்ளிட்ட பல மசோதாக்கள் கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் குறட்டை விட்டுக்கொண்டிருக்கிறது.

அந்த சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கவர்னர் ஆர்.என்.ரவி, தன் பொறுப்பை நிறைவேற்றாமல், மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராக சுற்றி, நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருவது, அரசியல் சாசனத்திற்கு அவர் செய்கின்ற துரோகம்.

பா.ஜ.க. ஊதுகுழல்

கவர்னர் பொறுப்பேற்பவர்கள் அரசியல்வாதி போல செயல்படவோ, பரப்புரை செய்யவோ மாட்டார்கள். அந்த மரபுக்கு மாறாக, அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதியாக, மத்திய பா.ஜ.க. அரசின் ஊதுகுழலாக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதோடு, தமிழ்நாட்டின் பண்பாடு, வரலாறு, நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் உயர்வு இவற்றுக்கு எதிராக தொடர்ந்து உளறிக்கொண்டிருக்கிறார்.

விடுதலை நாள் உரையில் இந்திய விடுதலையில் தமிழ்நாட்டின் பங்கு முதன்மையானது, முக்கியமானது என்பதை மிகத் தெளிவாக பட்டியலிட்டுக் குறிப்பிட்டிருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். விடுதலை வீரர்களைப் போற்றிப் பாராட்டுவதில் தி.மு.க. அரசு யாருக்கும் சளைத்தது அல்ல.

கவர்னர் புரிந்துகொள்ள வேண்டும்

விடுதலைப் போராட்ட வீரர்களை நாம் ஏன் இந்தளவுக்கு போற்றுகிறோம் என்றால், தமிழ்நாடுதான் விடுதலைப் போராட்டத்துக்கான விதையை முதலில் விதைத்தது. விடுதலை தாகத்தில், விடுதலை வேகத்தில், நாட்டுப்பற்றில் நம் தமிழ் இனம் இந்தியாவில் உள்ள எந்த இனத்திற்கும் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல.

இப்படி பட்டியல்கள் திராவிட மாடல் அரசில் ஏராளமாக இருக்கின்றன என்பதை கவர்னர் ஆர்.என்.ரவி புரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் முழக்கங்கள் வீரம் விளைந்த தமிழ் மண்ணில் தோன்றியவைதான் என்பதை நாம் பெருமிதத்தோடு நினைவுகூர முடியும் என்று விடுதலை நாள் விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

திருவாய் மலர்கிறார்

விடுதலை நாட்டின் முதல் பயங்கரவாத செயலாக, மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்றது கொடியவன் கோட்சே கும்பல். அந்த கோட்சேவையும் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்ற கூண்டில் ஏறியவர்களையும் கொண்டாடுகிற 'பண்பாட்டை' கடைப்பிடிக்கும் இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மேடையிலும் திருவாய் மலர்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி.

திராவிட இயக்கம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சாதகமாக இருந்தது என்று கூவுவது கவர்னர் மாளிகையில் தயாரிக்கப்படும் உரைகளில் அடிக்கடி இடம்பெறுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்தவர்கள் யார், குடிஅரசு ஏட்டில் 'இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்' என தலையங்கம் எழுதிச் சிறை சென்றவர்கள் யார் என்பதும் வரலாற்று பக்கங்களைப் புரட்டினால் புரியும். அதுவரை கவர்னர் மாளிகையே… அடக்கிடு வாயை.

பதவி விலகட்டும்

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கிய கவர்னர் என்ற நியமனப் பதவியில் வெட்கமின்றி உட்கார்ந்துகொண்டு, கூச்சமில்லாமல் பொய்களைப் பேசுகிறார் கவர்னர். திடீரென்று திருக்குறளில் "என்நன்றி கொன்றார்கும்" குறளை படித்திருக்கிறார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் ஊழல் கோப்புகளிலும், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களிலும் கையெழுத்திடாமல் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஊர் சுற்றித் திரியும் கவர்னர் ஆர்.என்.ரவிதான் அந்த குறளுக்கு பொருத்தமானவர். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சுகம் அனுபவித்துக்கொண்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்வதை கைவிட்டு, திருக்குறளுக்கு ஏற்ப நடக்க வேண்டும். இல்லையென்றால் கவர்னர் பதவியை விட்டு விலகி, அரசியல்வாதியாக, ஏன் பா.ஜ.க.வின் தலைவராகவோ, ஆர்.எஸ்.எஸ்.-ன் தலைவராகவோ ஆகட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்