குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் தவிப்பு
குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளாகினர்.
செந்துறை:
வடிகால் வாய்க்கால் அமைக்கவில்லை
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் இருந்து பொன்பரப்பி வரையிலான 6 கி.மீ. தொலைவிற்கு ரூ.2 கோடி 70 லட்சம் செலவில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக உஞ்சினி கிராமத்தின் கிழக்கு தெருவில் சுமார் 300 மீட்டர் தொலைவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது.
ஏற்கனவே இருந்த சாலையைவிட கூடுதல் உயரத்தில் இந்த சாலை அமைக்கப்பட்டது. மேலும் சாலையின் 2 பக்கமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த வாய்க்கால்களும் மண்ணை கொட்டி மூடப்பட்டுவிட்டது.
வாக்குவாதம்
இந்நிலையில் நேற்று அதிகாலை இப்பகுதியில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் மழைநீர் வெளியேற வழியின்றி அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்தும், சாலையில் தேங்கியும் குளம்போல் காட்சி அளிக்கிறது. வீடுகளுக்கு உள்ளே மழைநீர் புகுந்ததால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர். மேலும் மழைநீரை வெளியேற்ற வழியின்றி சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த உள்ளாட்சி பிரதிநிதிகளையும், போலீசாரையும் அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, இப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.