நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2022-09-02 17:14 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, பட்டவர்த்தி, வில்லியநல்லூர், கடலங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. பயிர்கள் நன்கு வளர்ந்து தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

பலத்த மழை

இதுஒருபுறம் இருக்க மேற்கண்ட பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வருவதால் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் மற்றும் அறுவடைக்கு தயாராக உள்ள நெல்வயல்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால், பல விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த சன்ன ரகமான ஆடுதுறை-45 என்ற நெல்லை சென்ற ஆண்டு நெல் கொள்முதல் செய்யப்பட்ட இடத்திற்கு கொண்டு சென்று திறக்கப்படாத அந்த கொள்முதல் நிலையத்தின் முன்பு கொட்டி வைத்து காத்துக் கிடக்கின்றனர். குறிப்பாக மயிலாடுதுறை பட்டவர்த்தி சாலையில் உள்ள வில்லியநல்லூர் கொள்முதல் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 15 நாட்களாக அறுவடை செய்யப்பட்ட நெல்லை குவித்து வைத்துள்ளனர். மழையால் நனையாமல் இருக்க அவற்றை வாடகைக்கு தார்ப்பாய் வாங்கி மூடி வைத்துள்ளனர்.

கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?

மேலும், விவசாயிகள் தினமும் கொள்முதல் நிலையம் வருவதும், மழை நின்றதும் அங்கு கொட்டி வைத்துள்ள நெல்லை வெயில் வரும்போது பரப்பி காய வைப்பதும் வாடிக்கையாக உள்ளது. சென்ற ஆண்டு கொள்முதல் நிலையங்களில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நெல்மூடைகள் மழையில் நனைந்து வீணாகியதால் இந்த ஆண்டு நிரந்தர கட்டிடம் உள்ள இடங்களில் முதலில் கொள்முதல் நிலையம் திறக்கப்படுவதாகவும், மற்ற பகுதிகளில் படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்றுவரை இப்பகுதியில் எந்த நெல் கொள்முதல் நிலையமும் திறக்கப்படவில்லை. ஆகவே, வில்லியநல்லூர் பகுதியிலேயே கொள்முதல் நிலையம் திறந்து இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்