மல்லல் கண்மாயில் வைகை தண்ணீரை நிரப்ப கோரிக்கை

நீர்வரத்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி மல்லல் கண்மாய்க்கு வைகை தண்ணீர் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-07-28 18:45 GMT

முதுகுளத்தூர், 

நீர்வரத்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி மல்லல் கண்மாய்க்கு வைகை தண்ணீர் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மழை பொழிவு குறைவு

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் மழை சரிவர பெய்யாததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய், ஊருணிகளும் தண்ணீர் இன்றி வறண்டு போய்தான் காட்சியளித்து வருகின்றன. திருஉத்தரகோசமங்கையில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் மல்லல் கிராமம் உள்ளது. இந்த கிராமம் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வருகின்றது. இந்த மல்லல் கிராமத்தில் உள்ள கண்மாயும் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றது.

கண்மாய்க்கு அருகில் உள்ள திருஉத்தரகோசமங்கை, மேலச்சீத்தை, களக்குடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்க்கு வைகை தண்ணீர் வருகிறது. ஆனால் மல்லல் கண்மாய்க்கோ வைகை தண்ணீர் வராததால் கண்மாய் தண்ணீர் இன்றி முற்றிலும் வறண்டு காட்சியளிக்கிறது.

வறண்ட கண்மாய்

அதே நேரம் அருகில் உள்ள திருஉத்தரகோசமங்கை, மேலச்சீத்தை, உள்ளிட்ட பல கிராமங்களில் வைகை தண்ணீரை பயன்படுத்தி அந்த கிராமங்களில் உள்ள விவசாயிகள் மிளகாய் மற்றும் நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இந்த மல்லல் கிராமத்தில் கண்மாயில் தண்ணீர் இல்லாமல் வறண்டதால் நெல் விவசாயம், மிளகாய், பருத்தி விவசாயமும் அடியோடு பாதிக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக வைகை தண்ணீர் வராததால் இந்த கிராம மக்கள் மழையை மட்டும் நம்பி இருக்கிறார்கள். மழை பெய்து கண்மாய் நிரம்பினால்தான் விவசாய பணியை தொடங்கி வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாததால் கண்மாய் வறண்டு விவசாய பணி மேற்கொள்ள முடியாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தூர்வார கோரிக்கை

கண்மாயில் தண்ணீர் இல்லாததால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் அலைந்து வருகின்றன. எனவே இந்த மல்லல் கிராமத்திற்கு வைகை தண்ணீர் வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். தண்ணீர் வரத்து வரும் கால்வாயை தூர்வார வேண்டும்.

அதோடு மல்லல் கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு வைகை தண்ணீர் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசும், மாவட்ட கலெக்டரும் எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்