செந்துறையில் வட்டார தலைமை மருத்துவமனையில் போதிய டாக்டர்களை நியமிக்க கோரிக்கை

செந்துறையில் வட்டார தலைமை மருத்துவமனையில் போதிய டாக்டர்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-02 19:34 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறையில் வட்டார தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு செந்துறை போலீஸ் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தூரத்திற்கு உள்ளே செல்ல வேண்டும். தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாமல் இயங்கி வருகிறது. அதே போன்று இந்த மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மத்திய கூட்டுறவு வங்கி, டீக்கடைகள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால் மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டு வருகிறது. தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு இருந்தபோதிலும் இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் அடிக்கடி இந்த மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வந்து செல்கின்றன. இருப்பினும் சாலைகளில் ஆம்புலன்சுகளுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நோயாளிகள் அவதியடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டு இருந்ததால் டிரைவர் ஆம்புலன்சை சாலையிலேயே நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த மருத்துவமனையில் போதிய டாக்டர்களை நியமித்து 24 மணி நேரமும் மருத்துவமனை இயங்க நடவடிக்கை எடுப்பதோடு, 108 ஆம்புலன்ஸ் செல்லும் பாதையில் வாகனங்களை நிறுத்தாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்