ஆன்லைனில் வாங்கிய கடனை அடைக்க செயின் பறிப்பு... பட்டதாரி இளைஞர் கைது

மயிலாடுதுறை அருகே நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 5 சவரன் செயினை பறித்த பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-09-22 08:07 GMT

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் பேச்சாவடி மேகனாப்பள்ளி சாலையை சேர்ந்தவர் அன்பழகன் மனைவி மலர்கொடி (வயது 67). இவர் சம்பவத்தன்று காலை தனது வீட்டின் அருகே சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது பதிவெண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் மலர்கொடி அருகே சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை மின்னல் வேகத்தில் பறித்து சென்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மலர்கொடி கூச்சலிட்டு உள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர் தலைமறைவாகிவிட்டார். தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றிய போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். இதில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, ஆடுதுறை, திருமஞ்சன வீதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் விஜயபாலன் (25 வயது) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து தலைமறைவாக இருந்த விஜயபாலனை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், 10 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த விஜயபாலன், ஆன்லைனில் வாங்கிய 6 லட்சம் ரூபாய் கடனை அடைப்பதற்காக வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்