இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை கலைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை கலைந்து சமவேலைக்கு, சமஊதியம் வழங்க வேண்டும் என ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்துள்ளது.
சிவகங்கை,
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை கலைந்து சமவேலைக்கு, சமஊதியம் வழங்க வேண்டும் என ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்துள்ளது.
முப்பெரும் விழா
தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை வட்டாரம் சார்பில் உலக மகளிர் தின விழா, பணி நிறைவு, வெளிநாடு சென்றவர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா வட்டார தலைவர் அய்யாச்சி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் வேல்முருகன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பொதுச் செயலாளர் காமராஜ், பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பேசினார்.
இதில், மாநில தலைவர் ஜோசப் சேவியர், துணைத்தலைவர் கோடீஸ்வரன், துணை செயலாளர் சிவாஜி, மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல், மாவட்ட பொருளாளர் பாண்டியராஜன், வட்டார செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சண்முகசுந்தரம், பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சம ஊதியம்
இந்த கூட்டத்தில், தமிழகத்தில் 2009-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மாதம் தோறும் ரூ.15 ஆயிரம் குறைவாக வழங்கப்பட்டு வருகிறது. ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை கலையும் வகையில் மூன்று நபர்கள் குழு உருவாக்கி உள்ளதை வரவேற்கிறோம். விரைவில் ஊதிய முரண்பாட்டை கலைந்து சம வேலைக்கு சம ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2003-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தமிழகத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்கு குடும்ப நலன் கருதி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அகவிலைப்படி
மத்திய அரசு எந்த தேதியில் அகவிலைப்படி உயர்வை வழங்குகின்றதோ அதே தேதியில் தமிழக அரசும் வழங்கும் நடைமுறையை பின்பற்றி அகவிலைப்படி உயர்வை அளிக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொகையை தொடர்ந்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.