சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்படும் மரங்களை மறுநடவு செய்ய வேண்டும்

சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்படும் மரங்களை மறுநடவு செய்ய வேண்டும்

Update: 2022-12-15 10:51 GMT

பல்லடம்

பல்லடம் நகரமானது கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவினாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81-ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றன. திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத்தாண்டும். இதனால் பல்லடம் நகரத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

இதனால் விபத்துக்கள், ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல்லடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், பல்லடம் அருகே காரணம்பேட்டை முதல் பல்லடம் அண்ணாநகர் வரை உள்ள சுமார் 12 கி.மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு அகற்றப்படுகிறது. இந்த மரங்களை மறுநடவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு புறமும் நூற்றுக்கணக்கான மரங்கள் இருந்தன. இதில் நூற்றாண்டு காலமான பழமையான மரங்கள் ஏராளம் இருந்தன. சாலை விரிவாக்க பணி காரணமாக, நிழல் தரும் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மரங்களை மாற்று இடத்தில் நடவு செய்ய முடியும். நெடுஞ்சாலைத்துறை மரங்களை பாதுகாக்க இது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதே போல் நீதிமன்ற உத்தரவுபடி வெட்டப்படும் ஒரு மரத்துக்கு இணையாக, 10 மரக்கன்றுகளை நட வேண்டும். சாலையோரம் வெட்டப்படும் மரங்களை வேறு இடத்தில் மறுநடவு செய்து பாதுகாக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்