ஆனைமலையில் உடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைப்பு

‘தினத்தந்தி’ நாளிதழின் செய்தி எதிரொலி காரணமாக ஆனைமலை காளியாபுரம் முதல் எட்டித்துறை வரை உடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்கும் பணி நடந்தது.

Update: 2023-09-30 19:00 GMT

ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட ஓடையகுளம், கோட்டூர் மற்றும் வேட்டைக்காரன்புதூர் ஆகிய பேரூராட்சிகளில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 2002-ம் ஆண்டு பொன்னாலம்மன் துறை கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த கூட்டுக்குடிநீர் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேற்பார்வையில் ஒப்பந்ததாரர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கிராமங்கள் தோறும் குடிநீர் வினியோகம் செய்யும் பணிகளை ஒப்பந்ததாரர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காளியபுரம் முதல் எட்டித்துறை வரை மட்டும் குடிநீர் கொண்டு செல்ல கூடிய குழாய்கள் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 5 மாதங்களாக பல லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகியது. அதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சீராக குடிநீர் கிடைக்கவில்லை.

இதன்காரணமாக பொதுமக்கள் குடிநீரின்றி மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து அவர்கள் உடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இதுபற்றிய செய்தி தினத்தந்தி நாளிதழில் கடந்த 29-ந்தேதி படத்துடன் வெளியானது. இதையடுத்து குடிநீர் வடிகால் வாரிய துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காளியபுரம் முதல் எட்டித்துறை வரை 3 இடங்களில் ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்திக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து உள்ளார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்