வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படுவதாக கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-03 19:15 GMT

திருவாரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படுவதாக கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாக்குச்சாவடி சீரமைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் 1.1.2024-ஐ தகுதி நாளாக கொண்டு திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 5-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் உள்ள 1,178 வாக்குச்சாவடி மையங்களை சீரமைப்பது தொடர்பாக அரசியல் கட்சி பிரநிதிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.

பழுதுநீக்கம்

இதில் 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை 2 வாக்குச்சாவடி மையங்களாக பிரித்தல், சேதம் அடைந்த கட்டங்களை கொண்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு பதிலாக புதிதாக கட்டப்பட்ட அரசு, தனியார் பள்ளி கட்டிடம் அல்லது அரசு கட்டிடங்களை தேர்வு செய்தல், வாக்குச்சாவடி மைய கட்டிடம் பெயர் மாற்றம் இருந்தால் திருத்தம் மேற்கொள்ளுதல், வாக்குச் சாவடி மையங்களை பழுதுநீக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

மறுசீரமைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி மையம், நன்னிலம் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடி மையத்தில் 1,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்டுள்ளன. இவை மறு சீரமைப்பிற்குள்ளாகின்றன.

அதேபோல குடியிருப்பு பகுதியில் இருந்து 2 கி.மீ.க்கு அப்பால் 3 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களை குடியிருப்புக்கு அருகில் இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாறுதல் செய்ய முன்மொழிவு

திருத்துறைப்பூண்டி வட்டத்தில் பாகம் எண்.111,112,113,114,117, மன்னார்குடியில் பாகம் எண்.146,147, முத்துப்பேட்டையில் பாகம் எண்.234,235, நீடாமங்கலத்தில் பாகம் எண்.15, 16, மன்னார்குடியில் 239,240,241, திருவாரூரில் பாகம் எண்.208. கூத்தாநல்லூரில் பாகம் எண்.262, நன்னிலத்தில் பாகம் எண்.270,272,280, வலங்கைமானில் பாகம் எண்.18,33,34,58,73,88,89,90 ஆகியவற்றுக்கு ஏற்கனவே செயல்பட்டு வந்த வாக்குச் சாவடி மைய கட்டிடம் சேதம் அடைந்ததால், புதிய கட்டிடத்தில் வாக்குச்சாவடி மையத்தை மாறுதல் செய்ய வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து முன்மொழிவு பெறப்பட்டு மேல் நடவடிக்கைக்காக ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வருகிற 4.11.2023 (சனிக்கிழமை), 5.11.2023 (ஞாயிற்றுக்கிழமை), 18.11.2023 (சனிக்கிழமை), 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்