நடைபாதை கடைகள் அகற்றம்
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் நடைபாதை கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்;
விழுப்புரம்
நடைபாதை கடைகள்
விழுப்புரம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லக்கூடிய அரசு டவுன் பஸ்கள் அனைத்தும் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஷேர் ஆட்டோக்களும், இந்த பஸ் நிலையத்திற்குள் சென்று வருகிறது.
இங்குள்ள பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டிருந்தன. இந்த கடைகள் பயன்பாட்டிற்கு வரும் வரை தற்காலிகமாக பஸ் நிலையத்திற்குள் நடைபாதை கடைகள் வைக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. தற்போது நகராட்சி வணிக வளாக கடைகள் ஏலம் விடப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த நிலையில் நடைபாதை கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன. இந்த கடைகளை தாமாக முன்வந்து அகற்றிக் கொள்ளுமாறு நடைபாதை கடை வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் அவர்கள், நடைபாதை கடைகளை அகற்றிக்கொள்ள முன்வரவில்லை.
அகற்றம்
இந்நிலையில் நேற்று நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையிலான அதிகாரிகள், விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை கடைகளை அதிரடியாக அகற்றினர். மேலும் பஸ் நிலையத்தில் பயணிகளின் உட்கட்டமைப்பு வசதிகள், பஸ்கள் நிற்கும் இடம், பயணிகள் ஓய்வெடுக்கும் இடம், ஆட்டோக்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவைகள் குறித்தும், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு நடத்தினர். நடைபாதை கடைகள் அகற்றப்படுவதையொட்டி அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.