சேலம் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

சேலம் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2023-06-30 21:24 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது. இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து விவசாய சங்கங்களின் பிரநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினர்.

தொடர்ந்து வேளாண்மை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், பயனாளிகளுக்கு வழங்கப்படும் மானிய விவரங்கள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் அளித்து பேசினர்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் பேசியதாவது:-

நீர்நிலை ஆக்கிரமிப்புகள்

அயோத்தியாப்பட்டணம் வட்டாரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆத்தூர் அருகே பைத்தூர்- கூலமேடு பகுதியில் உள்ள 10 கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள். ஆனால் நோய் மற்றும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் ஆத்தூருக்கு தான் கால்நடைகளை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே, பைத்தூர் பகுதியில் புதிதாக கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்.

விவசாயிகளை, தொழில் முனைவோராக மாற்றும் மத்திய அரசின் திட்டத்தில் செம்மறி ஆடு, வெள்ளாடு, நாட்டுக்கோழி மற்றும் பன்றிகள் வளர்ப்பு எண்ணிக்கையை பயனாளிகளுக்கு அதிகளவில் உயர்த்தி வழங்க வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்துடன் வழங்கப்படும் கடனுதவியை கூட்டுறவு வங்கியில் பெற வேண்டும் என்றால் அடமான பத்திரம் கட்டாயம் என்று கேட்கிறார்கள். ரூ.50 ஆயிரம் மானியத்திற்கு ரூ.15 ஆயிரம் செலவு செய்ய முடியுமா?. எனவே, அடமான பத்திரம் இல்லாமல் கூட்டுறவு வங்கிகளில் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏலத்தில் முறைகேடு

சேலத்தில் நகர நில ஒதுக்கீடு திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அதை செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள வ.உ.சி. மார்க்கெட்டில் 240 கடைகள் உள்ளன. விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு மட்டுமே கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கடந்த முறை ஏலத்தில் முறைகேடு நடந்ததால் ஐகோர்ட்டு தலையிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தது. கடைக்கு டெபாசிட் தொகை ரூ.15 லட்சம் என்கிறார்கள். கடைகள் ஏலம் விடுவதை நியாயமாக வெளிப்படை தன்மையோடு விடுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரூ.50 ஆயிரம் மானியம்

இதற்கு பதில் அளித்து கலெக்டர் கார்மேகம் பேசும்போது, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து உரிய தீர்வு காணப்படும். கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 400 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் செயல்படுத்தப்படும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை காப்பீடு 12 ஆயிரம் எண்ணிக்கையில் இலக்கு கோரப்பட்டுள்ளது. மேலும், நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்கவும், சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதிலாக புதியதாக மின் மோட்டார்கள் வழங்குவதற்கும், புதிய மின் மோட்டார்கள் பெறுவதற்கும் ரூ.50 ஆயிரம் வரையில் மானியம் வழங்கப்படுகிறது, என்றார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கவிதா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நீலாம்பாள், வேளாண்மை செயற்பொறியாளர் கலைச்செல்வி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மாலினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்