நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

விழுப்புரம் அருகே நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-03 18:45 GMT

விழுப்புரம் அருகே பூத்தமேடு கூட்டுசாலையின் வளைவு பகுதியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து ஓட்டல்கள், டீக்கடைகள், மளிகை கடைகள், பெட்டிக்கடைகள் என 10 கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இக்கடைகளால் அங்குள்ள சாலையின் வளைவில் வாகனங்கள் திரும்பும்போது அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தன. இதை தடுக்கும் வகையில் பூத்தமேடு கூட்டுசாலை பகுதியில் ரவுண்டானா அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து நெடுஞ்சாலை ஓரத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது. இருப்பினும் அவர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

இந்நிலையில் நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தமிழ்மலர், சாலை ஆய்வாளர் சசிக்குமார், உதவியாளர் திருமலை உள்ளிட்டோர் போலீஸ் பாதுகாப்புடன் பூத்தமேடுக்கு சென்றனர். பின்னர் அங்கு நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தீக்குளிக்க முயற்சி

இதற்கு அங்குள்ள கடை வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் அங்குள்ள மளிகை கடையை அதிகாரிகள் அகற்ற முயன்றபோது, அதன் உரிமையாளர்களான கனகராஜ் (வயது 55), அவரது தம்பி விஸ்வலிங்கம் (45), கனகராஜின் மகன் தினேஷ் (20) ஆகிய 3 பேரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென தாங்கள் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து திறந்து தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

உடனே அவர்கள் 3 பேரையும் போலீசார் தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேன், தீப்பெட்டியை பிடுங்கினர். பின்னர் அவர்கள் 3 பேரையும் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து, பொக்லைன் எந்திரத்தின் மூலம் 10 கடைகளும் அதிரடியாக அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், கெடார் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்