ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஊட்டியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-25 19:45 GMT

ஊட்டி

ஊட்டியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடைபாதை கடைகள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் 100-க்கும் மேற்பட்ட சாலையோர மற்றும் நடைபாதை கடைகள் உள்ளன. நகராட்சி நிர்வாகம் சார்பில் ஊட்டியில் ஆக்கிரமிப்பு கடைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, அவற்றை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு பதிலாக நகராட்சி சார்பில் புதிதாக கடைகள் கட்டி வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே கடைக்கு நிர்ணயம் செய்த வாடகை மற்றும் டெபாசிட் தொகை அதிகமாக இருப்பதாக கூறி சில வியாபாரிகள் கடையை வாடகைக்கு எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் அவர்கள் மீண்டும் பூங்கா நடைபாதையில் கடைகள் வைத்தனர்.

அதிகாரிகளுடன் வாக்குவாதம்

இந்தநிலையில் நேற்று நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் உத்தரவின் பேரில், நகரமைப்பு அலுவலர் ரவி, திட்ட அலுவலர் மீனாட்சி தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முயன்றனர். அப்போது வியாபாரிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சங்கரலிங்கம், பொருளாளர் நவீன் சந்திரன் ஆகியோர் அதிகாரிகள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வியாபாரிகள் தாங்களாகவே பொருட்களை எடுத்து கடைகளை அகற்றினர்.

இதுகுறித்து சாலையோர வியாபாரிகள் கூறியதாவது:-

தாவரவியல் பூங்கா பகுதிகளில் 120 வியாபாரிகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. நாங்கள் வங்கிகளில் கடன் வாங்கி உள்ளோம். தற்போது திடீரென கடைகளை காலி செய்ததால், வங்கி கடன் கட்ட முடியாது. ஒரு நாள் வங்கி கடன் தாமதமாக கட்டினாலும் அபராதம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், முதல் கட்டமாக 50 பேருக்கும், மீதம் உள்ளவர்களுக்கு எதிர்காலத்திலும் கடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்