98 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் 98 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

Update: 2023-05-04 20:15 GMT

காந்திபுரம்

கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் 98 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

காந்திபுரம் பஸ் நிலையம்

கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நீர்நிலைகள், பஸ்நிலையங்கள், சாலையோரங்கள் என பல்வேறு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் காந்திபுரம் பஸநிலையத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் டீக்கடைகள், செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள், செருப்புக்கடைகள், குளிர்பான கடைகள் என பல்வேறு கடைகள் செயல்பட்டன. அதில் சில கடைகள் மாநகராட்சி அனுமதித்த இட அளவை விட கூடுதலாக முன்பகுதியில் இடத்தை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக பொருட்களை வைத்து வியாபாரம் செய்வது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது.

நோட்டீஸ்

பின்னர் 71 ஆக்கிரமிப்பு கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் ஒரு வாரத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால நேற்று காலை மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ் தலைமையில் உதவி நகரமைப்பு அலுவலர் பாபு முன்னிலையில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் பஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களுடன் பாதுகாப்புக்காக காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் தலைமையில் போலீசார் வந்தனர். பின்னர் வியாபாரிகளிடம், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுமாறு அதிகாரிகள் கூறினர்.

98 கடைகள்

இதையடுத்து வியாபாரிகள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். நோட்டீஸ் வழங்கப்பட்ட கடைகளை தவிர்த்து கூடுதலாக சில கடைகளும் ஆக்கிரமிப்பு செய்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடைகளும் ஆக்கிரமிப்பை அகற்றிக்கொண்டன. அதன்படி மொத்தம் 98 கடைகள் அகற்றப்பட்டன. மேலும் தள்ளுவண்டியில் கூழ் வியாபாரம் செய்துகொண்டு இருந்த பெண்களையும் அதிகாரிகள் வெளியேற்றினர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, இங்கு கடந்த பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறோம். கடைகளை அகற்றியதால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதை விட்டால் எங்களுக்கு வேறு வேலை தெரியாது. எங்களுக்கு இங்கேயே தனியாக இடம் அமைத்து கொடுத்து வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்