குமுளி மலைச்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் - அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் வழங்கினார்

குமுளி மலைச்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் ஐ.பெரியசாமி நிவாரணம் வழங்கினார்.

Update: 2022-12-25 06:19 GMT

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அய்யப்ப பக்தர்கள் 10 பேர் கார் ஒன்றில் சபரிமலைக்கு சென்று தரிசனம் முடித்து இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். குமுளி மலைச்சாலையில் உள்ள பாலம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சுமார் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து வந்த தமிழக- கேரள மாநில போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சுமார் 50 அடி பள்ளத்தில் சிக்கியிருந்த காருக்குள் இருந்த அய்யப்ப பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக பலியாகினர். 9 வயது சிறுவன் உள்பட 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. மற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் உயிரிழந்த அய்யப்ப பக்தர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அனைவரது சடலங்கள் உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து குமுளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்த 2 நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குமுளி மலைச்சாலை விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்