போலீஸ் விசாரணையில் பற்களை பிடுங்கியதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்- எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

போலீஸ் விசாரணையில் பற்களை பிடுங்கியதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-04-03 19:40 GMT

அம்பை:

அம்பை பகுதியில் போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த நிலையில் பற்களை பிடுங்கியதால் பாதிக்கப்பட்ட சிவந்திபுரத்தைச் சேர்ந்த ரூபன் அந்தோணி, மாரியப்பன், இசக்கிமுத்து, விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த வேதநாராயணன் ஆகியோர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ.வுடன் அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். பற்களை பிடுங்கியதால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கும் டாக்டர் கவிதா சிகிச்சை அளித்தார்.

பின்னர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. கூறுகையில், ''அம்பை பகுதியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். எனது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதுடன் நிவாரண உதவி வழங்க வேண்டும். உதவி கலெக்டரின் விசாரணை சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன். இப்பகுதி மக்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் முதலில் வந்து நிற்பேன். அரசியல் ஆதாயம் தேட மாட்டேன்'' என்றார்.

அம்பை ஒன்றிய செயலாளர் விஜயபாலாஜி, சேரை மாரிச்செல்வம், நகர செயலாளர்கள் அம்பை அறிவழகன், விக்கிரமசிங்கபுரம் கண்ணன், மணிமுத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன்பாபு, இலக்கிய அணி கூனியூர் மாடசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்