வனவிலங்குகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
பெரம்பலூர் மாவட்டத்தில் வனவிலங்குகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போதிய அளவு உலர்களம்
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில் விவசாயி நீலகண்டன் பேசுகையில், மாவட்டத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளத்தை உலர்த்தி காய வைக்க போதுமான அளவு உலர்களம் அமைக்கவும், சேதமடைந்த உலர்களத்தை சீரமைத்து விவசாயிகளின் பயன்பாட்டிக்கு கொண்டு வரவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழைக்கு முன்பே சேதமடைந்த தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும். உரங்கள் தங்கு தடையின்றி கிடைக்க செய்ய வேண்டும். கீழப்புலியூர் சிலோன் காலனியை இலங்கை அகதிகளான 6 பேருக்கு அரசால் வழங்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், என்றார்.
தூர்வாரப்படாத வரத்து வாய்க்கால்கள்
ஏ.கே.ராஜேந்திரன் பேசுகையில், விவசாயிகளுக்கு குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்படுவது தவிர்க்க வேண்டும். விவசாய விளை நிலங்களில் வனவிலங்குகள் தொந்தரவுகளை தடுக்க வேண்டும். வனவிலங்குகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு வனத்துறையினர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கூட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும், என்றார்.
செல்லத்துரை பேசுகையில், நீர்நிலைகளில் பாரபட்சமின்றி வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும். பழுதடைந்த மதகுகளை சீரமைக்க வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்க தமிழக அரசை மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும். கறவை மாடு வாங்க கடனும், வட்டியில்லா கடனும் விவசாயிகளுக்கு வங்கிகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலையும், தொடர் திருட்டையும் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகமாக சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளத்தை விவசாயிகளின் நிலங்களுக்கு சென்று நேரடி கொள்முதல் செய்ய திட்டத்தை மாவட்டத்தில் தொடங்க வேண்டும். பருத்தி விவசாயிகளுக்கு கொட்டகை வழங்க வேண்டும், என்றார்.
நிவாரணம் வழங்க வேண்டும்
ராஜா சிதம்பரம் பேசுகையில், போலி ஆவணம் தயார் செய்து நிலத்தை விற்று பெற்ற பட்டாவை ரத்து செய்ய வேண்டும். இந்த நிதி ஆண்டில் தமிழக அளவில் சாதாரண முன்னுரிமையில் இலவச விவசாய மின் இணைப்பின் இலக்கீட்டை 25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், என்றார். ராமலிங்கம் பேசுகையில், நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கரும்பு, மக்காச்சோள பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பூபதி பேசுகையில், கூலி ஆட்கள் பற்றாக்குறையால் பயிர்களுக்கு டிரோன் மூலம் உரம் தெளிக்கவும், டிரோன் வாங்குவதற்கும் மானியம் வழங்க வேண்டும், என்றார். ரமேஷ் பேசுகையில், பிக் ஹவர் மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். நில அளவையாளர் துறையில் அவுட்சோர்சிங் முறையில் ஊழியர்களை நியமிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று படித்த மாணவர்களுக்கு கடனை கட்டுமாறு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருவதை நிறுத்தி, கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், என்றார். விவசாயிகளிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
மவுன அஞ்சலி
முன்னதாக கூட்டத்தில் பிரபல வேளான் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாயிகள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினா். கூட்டத்தில் விவசாயிகளிடையே கலெக்டர் கற்பகம் தரிசு நிலத்தை விவசாயம் செய்வதற்கு உதந்த நிலமாக மாற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து பேசினார்.