பூண்டி ஏரியில் இருந்து 1,000 கன அடி உபரிநீர் திறப்பு: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

'சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் பூண்டி ஏரிக்கு கூடுதல் நீர் வந்ததால் 1,000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது, பொதுமக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

Update: 2023-09-25 20:59 GMT

சென்னை,

சென்னை மாநகருக்கு தேவையான குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து கொண்டு வந்து தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில், நேற்று முன்தினம் காலை 8 மணியில் இருந்து நேற்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்தது. இதனால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக, பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 15 மி.மீ. என்ற அளவில் மழை பெய்தது. அதேபோல், சோழவரம் 29, புழல் 9, கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை 10, செம்பரம்பாக்கம் 26.4 மற்றும் தாமரைப்பாக்கம் 69, கொரட்டூர் அனைக்கட்டு 43, நுங்கம்பாக்கம் 6.2, மீனம்பாக்கம் 16.4 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பெய்துள்ளது.

கிருஷ்ணா நதி நீர்

கிருஷ்ணா நதி நீர் கால்வாய் திட்டத்தின் கீழ் 370 கன அடியும், மழையால் கால்வாய் மூலம் 1,150 கன அடி உட்பட 1,520 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பூண்டி ஏரியில் 2 ஆயிரத்து 792 (2.7 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. இதேபோல், சோழவரம் 160 மில்லியன் கன அடி, புழல் 2 ஆயிரத்து 188 மில்லியன் கன அடி, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை 325, செம்பரம்பாக்கம் 2 ஆயிரத்து 700, வீராணம் 630 உட்பட ஆக மொத்தம் 8 ஆயிரத்து 795.50 மில்லியன் கன அடி அதாவது 8.7 டி.எம்.சி. இருப்பு உள்ளது.

இது மொத்த இருப்பில் 66.45 சதவீதமாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8 ஆயிரத்து 290 மில்லியன் கன அடி அதாவது 8.2 டி.எம்.சி. இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மழையால் பெறப்பட்ட நீர் ஏரிகளில் சேமிக்கப்பட்டு, படிப்படியாக சுத்திகரிக்கப்பட்டு குடிநீருக்கு பயன்படுத்தப்படும்.

பூண்டியில் உபரி நீர் திறப்பு

பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் முழு கொள்ளளவான 35 அடியை எட்டி விடும் என்ற நிலை ஏற்படும். இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, ஏரியில் இருந்து உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று மாலை 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகப்படியானால் நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக உபரி நீர் திறந்து விடப்படும்.

எனவே கொசஸ்தலை ஆறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன் பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர் பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நப்பாளையம், இளையன்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையன்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் கரையின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே பூண்டி ஏரியில் உபரிநீர் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்