மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றில் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றில் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-28 18:34 GMT

தண்ணீர் திறப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 26-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாகவும், மாலையில் வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது. பின்னர் இரவில் வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகமானது. நேற்று காலை வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

1 லட்சத்து 953 கனஅடி தண்ணீர்

மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் காரணமாக மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 2 ஆயிரத்து 173 கனஅடி தண்ணீர் வந்தது.

இதனால் மாயனூர் கதவணையிலிருந்து காவிரி ஆற்றிற்கு 1 லட்சத்து 953 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 4 பாசன வாய்க்கால்களில் ஆயிரத்து 220 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணிதுவைக்கவோ இறங்க வேண்டாம் என நீர்வளத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேட்டூர் தண்ணீரால் தற்போது மாயனூர் கதவணை கடல்போல் காட்சியளிக்கிறது.

நொய்யல்

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, புங்கோடை வழியாக தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் வழியே சென்று கொண்டிருக்கிறது. இங்கிருந்து காவிரி ஆற்றில் வெள்ள நீர் இரு கரைகளையும் தொட்டபடி திருச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் வருவாய்த்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி ஆற்றுக்கு சென்று குளிக்கவும், மீன்பிடிக்கவும், நீச்சல் அடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதாைககள் வைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரியாற்றின் இரு கரைகளையும் தொட்டு செல்லும் தண்ணீரை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து செல்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்