நஷ்டஈடு வழங்கக்கோரி உறவினர்கள் மறியல்

நஷ்டஈடு வழங்கக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-04 18:40 GMT

மின்சாரம் பாய்ந்து சாவு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பாப்பாங்குளம் கிராமத்தை சேர்ந்த ரவியின் மகன் கார்த்திக்(வயது 30). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் கழுவந்தோண்டி கிராமத்தில் ஒரு வீட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது வீட்டின் மேலே சென்ற மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறியல்

இந்நிலையில் கார்த்திக்கின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்து, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரிடம் நஷ்டஈடு பெற்று வழங்க வேண்டும். வீட்டு உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நேற்று கிராம மக்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன்பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள், உறவினர்கள் கலைந்து சென்றனர்.

வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு

மேலும் இது குறித்து வீட்டின் உரிமையாளர் கழுவந்தோண்டி கரைமேடு பகுதியை சேர்ந்த அருள்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்