ஏந்தூரில் உறவினர்கள் சாலை மறியல்

பிரசவத்தின் போது தாய், குழந்தை இறந்த சம்பவத்தில் சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏந்தூரில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-14 18:27 GMT

பிரம்மதேசம், 

திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள ஏந்தூர் புதிய காலனியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன்(வயது 29). தச்சு தொழிலாளி. இவரது மனைவி சந்தியா(25). இவர்களுக்கு பிரகியா(5), சிவமணி(3) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் 3-வதாக சந்தியா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான சந்தியா பிரசவத்துக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு குழந்தை எடை அதிகமாக இருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் சந்தியாவுக்கு பிரசவம் நடைபெற்றது. இதில் சந்தியாவுக்கு பெண் குழந்தை இறந்து பிறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இறந்த குழந்தையின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர். தொடர்ந்து திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வந்த சந்தியாவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சந்தியா சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

பிரேத பரிசோதனை

இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து சந்தியாவின் உடல் வாகனம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதையறி்ந்த

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன் தலைமையில் திண்டிவனம் தொகுதி செயலாளர் வக்கீல் பூபால், ஒன்றிய செயலாளர் கோட்டி பாலா, நிர்வாகிகள் மலைச்சாமி, பாரதி, மகாலிங்கம், தாமோதிரன் மற்றும் சந்தியாவின் உறவினர்கள், பொதுமக்கள் பிரம்மதேசம் அருகே ஏந்தூர் கூட்டுரோட்டில் ஒன்று திரண்டனர்.

பின்னர் அவர்கள், தவறான சிகிச்சை அளித்ததால் தான் சந்தியா இறந்துள்ளார். எனவே இதற்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்குள்ள திண்டிவனம்-மரக்காணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் மரக்காணம் தாசில்தார் சரவணன், பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

அதனை ஏற்று சந்தியாவின் உடலை உறவினர்கள் பெற்றனர். இருப்பினும் நாளைக்குள் (அதாவது இன்று) எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சந்தியாவின் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்