பாசனத்திற்கு தண்ணீர் தர மறுப்பது விவசாயிகளுக்கு தமிழக அரசு இழைக்கும் அநீதி - டிடிவி தினகரன்

முல்லைப் பெரியாறு அணை 137 அடியை கடந்த நிலையிலும் வைகை அணையில் இருந்து தண்ணீரை திறக்க மறுப்பது ஏன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Update: 2023-11-26 08:22 GMT
கோப்புப்படம் 

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் 85 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் ஒருபோக பாசன வசதி பெற்று வருகின்றன. பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன பகுதிகளுக்கு 900 கன அடி வீதமும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன பகுதிகளுக்கு 230 கன அடி வீதமும் வைகை அணையிலிருந்து கடந்த 15 ஆம் தேதி திறக்கப்பட்ட நீர் 24 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் குடிநீர் தேவையை மட்டுமே பூர்த்தி செய்ததாகவும், விவசாயத் தேவைக்கு பயன்படவில்லை என அந்நீரை நம்பியிருக்கும் 120 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பருவமழை பொய்த்த காரணத்தினால் கடந்த ஜூன் மாதம் கள்ளந்திரி இருபோக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாத நிலையில், தற்போது காலம் கடந்து திறக்கப்பட்டிருக்கும் குறைந்த அளவு தண்ணீரும் விவசாயத்திற்கு போதுமானதாக இல்லை என்பதால் மதுரை மாவட்ட விவசாயிகள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர்.

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழையாலும் முல்லைப் பெரியாறு அணை நீராலும் வைகை அணை நிரம்பி உள்ளது. கடந்த காலங்களை ஒப்பிடும்போது முல்லைப் பெரியாறு அணையில் 118 அடி நீர் இருப்பு இருக்கும்போது ஒருபோக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதாகவும், தற்போது முல்லைப் பெரியாறு அணை 137 அடியை கடந்த நிலையிலும் வைகை அணையில் இருந்து தண்ணீரை திறக்க மறுப்பது ஏன்?

இது தொடர்பாக விவசாயிகள் எழுப்பிய கேள்விக்கு மதுரை மாவட்ட ஆட்சியரும், அரசும் உரிய பதிலை வழங்காமல் தண்ணீர் திறக்க மறுப்பதால் விவசாயிகள் ஒன்று திரண்டு போராடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே காவிரியில் இருந்து உரிய நேரத்தில் நீரை தமிழக அரசு பெற்றுத் தர முடியாத காரணத்தினால், டெல்டா பகுதியில் லட்சக்கணக்கான ஏக்கர் அளவிலான பயிர்கள் கருகிய நிலையில், ஒருபோக பாசனத்திற்கு தமிழக அரசு தண்ணீர் தர மறுப்பது மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

ஆகவே, பெரியாறு அணையில் போதுமான அளவு நீர் இருந்தும் பாசனத்திற்கு தண்ணீர் தர மறுப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்பதை உணர்ந்து, மதுரை மாவட்டம் பெரியாறு, திருமங்கலம் பிரதான கால்வாய், மற்றும் உசிலம்பட்டி 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீரை திறந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்