கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறப்பு 100 கன அடியாக குறைப்பு

கல்லணையில் இருந்து கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறப்பு 100 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் வருணபகவான் கருணையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

Update: 2023-09-20 19:50 GMT

திருக்காட்டுப்பள்ளி;

கல்லணையில் இருந்து கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறப்பு 100 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் வருணபகவான் கருணையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

கல்லணைக்கால்வாய்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பூதலூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயில் கொளுத்தியது. மாலை நேரத்தில் மழை கொட்டி குளிர்ந்த சூழலை தோற்றுவித்தது. நேற்று முன் தினம் பகல் முழுவதும் சித்திரை வெயில் போல காணப்பட்ட நிலையில் மாலையில் இடி மின்னலுடன் மழை பெய்தது.அதிக பட்சமாக பூதலூரில் 50.8 மி. மீட்டர் மழை பெய்தது. திருக்காட்டுப்பள்ளியில் 35.4 மி. மீட்டர் மழை பெய்தது. கல்லணையில் 9.8மி. மீட்டர் மழை பெய்தது. கல்லணையில் இருந்து கல்லணைக் கால்வாயில் நேற்று 100 கன அடி மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மழை

இதனால் கல்லணை கால்வாய் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாமல் இருந்தது. காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. வெண்ணாற்றில் 4504 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் நீர் வரத்து நேற்றைய நிலவரப்படி 2938 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 11.645 டி.எம்.சியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 39.13 அடியாக இருந்தது. அணையில் இருந்து 6503 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.தஞ்சை டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கு மழை பெய்து வரும் நிலையில் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை. அதே நேரத்தில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய உரிமை தண்ணீரை தர மறுத்து வருகிறது.

தீபாவளி பண்டிகை

குறுவை அறுவடை செய்யவேண்டும். பின்னர் சம்பா சாகுபடி செய்ய வேண்டும். தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை குறுவையை நம்பியே தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் உள்ளது. குறுவை பொய்த்ததால் விவசாயிகள் தீபாவளி பண்டிகை கொண்டாட இயலாத நிலை ஏற்படக்கூடும். எனவே வருண பகவான் வாழ வைப்பார் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்