ஆன்லைன் மோசடி நபரால் திருடப்பட்ட ரூ.66 ஆயிரம் மீட்பு
செங்கத்தில் ஆன்லைன் மோசடி நபரால் திருடப்பட்ட ரூ.66 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.
செங்கம் தாலுகா மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது செல்போன் எண்ணுக்கு அவர் சேமிப்பு கணக்கு வைத்து உள்ள வங்கியின் வாடிக்கையாளர் சேவையில் இருந்து பேசுவதாக அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய நபர் உங்களுடைய வங்கிக்கணக்கில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும் கூறியுள்ளார்.
மேலும் அந்த நபர் வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை கேட்டுள்ளார். இதையடுத்து தண்டபாணி வங்கிக்கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.66 ஆயிரம் ஆன்லைன் மோசடி நபரால் திருடப்பட்டது தெரியவந்தது.
இதனால் அவர் போலியான நபரிடம் பணத்தை இழந்ததை அறிந்ததும், உடனடியாக இழந்த பணத்தை மீட்டு கொடுக்குமாறு சைபர் கிரைம் பண மோசடி புகார் எண் 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
இதையடுத்து திருவண்ணாமலை சைபர் கிரைம் போலீசார் உரிய விசாரணை செய்து துரிதமாக செயல்பட்டு அவர் இழந்த பணத்தை மீட்டனர்.
அதன் பின்னர் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் அறிவுறுத்தலின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி மீட்கப்பட்ட ரூ.66 ஆயித்தை தண்டபாணியிடம் ஒப்படைத்தார்.