ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான இடம் மீட்பு
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
சோமவார மடம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான சோமவார மடம் வேதாரண்யம் தெற்கு வீதியில் உள்ளது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் திருப்பூண்டி சைவ செட்டியார்கள் தங்கி 4-வது சோமவாரத்தில் உபயம் செய்து அன்னதானம் வழங்குவது வழக்கம்.
இந்த இடத்திற்கு திருப்பூண்டி சைவ செட்டியார்கள் சார்பில் கோவிலுக்கு முறையாக குத்தகை செலுத்தப்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்பு
இந்த மடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து குடியிருந்து வந்தார். தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்ததால் அந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்ட திருப்பூண்டி சைவ செட்டியார்கள் அறநிலையத்துறை ஆணையருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறையினர் அந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த முடிவு செய்தனர்.
நோட்டீஸ்
இதைதொடர்ந்து கட்டிடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதன் நகல் வீட்டின் கதவில் ஒட்டப்பட்டது. ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மடத்தில் குடியிருந்து வந்தார். இந்த நிலையில் அறநிலையத்துறை சார்பில் அந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்டிடம் கட்ட திருப்பூண்டி சைவ செட்டியார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ரூ.1 கோடி இடம் மீட்பு
இதையடுத்து நேற்று காலை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுப்படி நாகை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, வேதாரண்யம் கோவில் நிர்வாக அதிகாரி கவியரசு மற்றும் வருவாய்துறையினர், துணை போலீஸ் சூப்பிண்டு முருகவேல், இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், கன்னிகா, பசுபதி ஆகியோர் சென்றனர்.
50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் பொக்லின் எந்திரம் மூலம் மடத்தில் இருந்த பழமையான ஓட்டு கட்டிடம் இடிக்கப்பட்டு ரூ.1 கோடி மதிப்பிலான இடத்தை மீட்டனர்.