ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பிலான நிலங்கள் மீட்பு
ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பிலான நிலங்கள் மீட்பு
பேராவூரணி அருகே கோவில்களுக்கு சொந்தமான ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்புள்ள நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
ஆக்கிரமிப்புகள்
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் பிரசித்தி பெற்ற நீலகண்டபிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கீழ் பழைய பேராவூரணி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், செங்கமங்கலம் தெய்வாங்கப்பெருமாள் கோவில், மார்க்கண்டேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்கள் உள்ளன. இதில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக பேராவூரணி செகண்ட் பிட் கிராமத்தில் 89 செண்ட் புன்செய் நிலமும், செங்கமங்கலம் தெய்வாங்கப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான செங்கமங்கலம் கிராமத்தில் உள்ள 4ஏக்கர் 53 செண்ட் புன்செய் நிலமும், செங்கமங்கலம் மார்க்கண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மாவடுக்குறிச்சி மேற்கு கிராமத்தில் உள்ள 3 ஏக்கர் 42 செண்ட் நஞ்சை நிலமும் என மொத்தம் 8 ஏக்கர் 84 செண்ட் நிலங்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.
நிலங்கள் மீட்பு
இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகையா, இந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தார் சங்கர், நில அளவையர் ரெங்கராஜன், பேராவூரணி சரக ஆய்வாளர் அமுதா ஆகியோர் முன்னிலையில் நீலகண்ட பிள்ளையார் கோவில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்துக்கு வந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆக்கிரமிப்புதாரர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பிலான கோவில் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். பின்னர் நிலங்கள் மீட்கப்பட்டு அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.