சரக்கு போக்குவரத்து மூலம்ரூ.128¾ கோடி வருவாய் ஈட்டி சாதனை

சேலம் ரெயில்வே கோட்டத்தில் இந்த நிதியாண்டில் சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.128¾ கோடி வருவாய் ஈட்டி சாதனை புரிந்துள்ளதாக கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.;

Update:2022-10-19 01:31 IST

சூரமங்கலம்:-

சேலம் ரெயில்வே கோட்டத்தில் இந்த நிதியாண்டில் சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.128¾ கோடி வருவாய் ஈட்டி சாதனை புரிந்துள்ளதாக கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

சரக்கு போக்குவரத்து

சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சரக்கு மற்றும் பார்சல்களை ஏற்றுவதில் நடப்பு நிதியாண்டில் சேலம் பிரிவு சிறப்பாக கையாண்டுள்ளது. அதன்படி இந்த நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை சரக்கு போக்குவரத்து மூலம் அதிக வருவாய் ஈட்டியுள்ளது. அதாவது 15 லட்சத்து 78 ஆயிரத்து 54 டன் சரக்குகளை ஏற்றியதன் மூலம் ரூ.128 கோடியே 79 லட்சம் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் 14 லட்சத்து 52 ஆயிரத்து 215 டன் சரக்குகளை ஏற்றி ரூ.115 கோடியே 77 லட்சம் வருவாய்ஈட்டியது.

சேலம் கோட்டத்தை பொறுத்தவரையில் கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் 8.66 சதவீத கூடுதல் சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதனால் சரக்கு போக்குவரத்து மூலம் 11.25 சதவீதம் அதிக வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. பெட்ரோலிய பொருட்கள், சிமெண்டு, இரும்பு உள்ளிட்ட பொருட்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பார்சல்கள்

இதேபோல் பார்சல்களை ஏற்றுவதில் சேலம் ரெயில்வே கோட்டம் வளர்ச்சி கண்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 23 ஆயிரத்து 185 டன் பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம் ரூ.11 கோடியே 86 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது. கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 17 ஆயிரத்து 709 டன் பார்சல்கள் ஏற்றி அனுப்பியதன் மூலம் ரூ.10 கோடியே 23 லட்சத்து 54 ஆயிரம் வருவாய் ஈட்டியது. இதன்மூலம் 15.87 சதவீத கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.

காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் கோவையில் இருந்து ஏற்றப்பட்டு, புதுடெல்லி, கவுகாத்தி போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டன. திருப்பூரில் இருந்து பருத்தி உள்ளாடைகள் மராட்டியம் மற்றும் மேற்குவங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஈரோட்டில் இருந்து பார்சல் வேன்கள் மூலம், பாட்னா, மால்டா, கவுகாத்தி போன்ற இடங்களுக்கு முட்டைகள் கொண்டு செல்லப்பட்டன.

இவ்வாறு அதில் கூறிஉள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்