ஆழ்வார்திருநகரியில் நெற்பயிரில் இலை கருகல் நோயை கட்டுப்படுத்த பரிந்துரை....!

ஆழ்வார்திருநகரியில் நெற்பயிரில் இலை கருகல் நோயை கட்டுப்படுத்த வேளாண் துறை சார்பில் பரிந்துரை வழங்கப்பட்டது.

Update: 2022-07-06 03:21 GMT

தென்திருப்பேரை,

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் தற்போது முன்கார் பருவ நெல் சாகுபடி சுமார் 1900 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. தற்போது நெற்பயிர்கள் தூர்கட்டும் பருவத்தில் உள்ள நிலையில் நெற்பயிரில் பாக்டீரியா இலைகருகல் நோய் அறிகுறிகள் தென்படுகிறது.

இவற்றின் அறிகுறி மற்றும் கட்டுப்படுத்தல் முறைகள் குறித்து ஆழ்வார் திருநகரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் அல்லி ராணி தெரிவித்துள்ளதாவது,

பாக்டீரியா, இலைகருகல் நடவுசெய்த 3-4 வாரத்தில் பயிரில் தோன்றுகிறது. இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் கருகியது போன்ற அறிகுறிகள் தென்படும். இதனால் இலை நூனி மற்றும் விளிம்புகள் காய்ந்து விடுகிறது. இந்த பாக்டீரியா நோய்க்கிருமிகள் பாசன நீர் மூலமாகவும், காற்று மூலமாகவும், விதைகள் மூலமாகவும் பயிரில் வேகமாக பரவும் தன்மை கொண்டது.

இதனை கட்டுப்படுத்திட விதைகளை விதைக்கும் முன்னர் சூடோமோனாஸ் 10 கிராம் ஒரு கிலோ நெல் விதைக்கு என்ற அளவில் விதை நேர்த்தி செய்து பின்னர் விதைக்க வேண்டும். நாற்றுகளின் வேர்களை சூடோமோனாஸ் கரைசலில் நனைத்து நடவு செய்யலாம்.

பரிந்துரை செய்யப்பட்ட யூரியா உரத்தினை ஜிப்சம் மற்றும் தூள் செய்த வேப்பம் புண்ணாக்குடன் 5:4: 1 எந்த விகிதத்தில் ஒரு நாள் கலந்து வைத்திருந்து வயலில் மேலுரமாக இடலாம். வேப்பங்கொட்டை சாரு 5 சதம் அல்லது 3 சதம் வேப்பம் எண்ணெய் கரைசல் நோய் தோன்றும் போதும் பின்னர் 10 நாள் இடைவெளியில் மறுமுறையும் தெளிக்கலாம்.

நோய் அதிகம் இருந்தால் ஸ்டெரெப்டோ மைசின் சல்பேட் 300 கிராம் அல்லது காப்பர் ஆக்சிகுளோரைட் 1250 கிராம் ஒரு எக்டேருக்கு என்ற முறையில் தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு தென்திருப்பேரை உதவி வேளாண்மை துறை அலுவலகத்தை அணுகி பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்