'எங்கள் சமூகத்துக்கு கிடைத்த அங்கீகாரம்'

இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமிலாவிடம் ‘மார்க் ஷண்ட்’ விருது பெற்றதால் எங்கள் சமூகத்துக்கு அங்கீகாரம் கிடைத்து உள்ளது என நீலகிரி பழங்குடியின வாலிபர்கள் ரமேஷ் மாறன், விஷ்ணுவரதன் தெரிவித்தனர்.

Update: 2023-07-01 20:00 GMT


கூடலூர்


இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமிலாவிடம் 'மார்க் ஷண்ட்' விருது பெற்றதால் எங்கள் சமூகத்துக்கு அங்கீகாரம் கிடைத்து உள்ளது என நீலகிரி பழங்குடியின வாலிபர்கள் ரமேஷ் மாறன், விஷ்ணுவரதன் தெரிவித்தனர்.


கலை பொருட்கள்


நீலகிரி மாவட்டம் முதுமலை மற்றும் கூடலூர் வனப்பகுதியில் எதற்கும் பயன்படாத லண்டானா உண்ணி செடிகளின் குச்சிகளை கொண்டு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் யானைகள் உள்ளிட்ட கலைநயம் மிக்க பொருட்களை கூடலூர் தொரப்பள்ளியை சேர்ந்த பழங்குடியின மக்கள் வடிவமைத்து வருகின்றனர்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதுமலைக்கு வந்த பிரதமர் மோடி, பழங்குடியின மக்களால் வடிவமைக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டார். தொடர்ந்து சிறப்பாக வடிவமைத்து உள்ளதாக அவர்களை பாராட்டினார். இந்த நிலையில் எலிபண்ட் பேமிலி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் விருது வழங்கும் விழா லண்டனில் நடந்தது. இதில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமிலா ஆகியோர் கூடலூர் தொரப்பள்ளியை சேர்ந்த கைவினை பொருட்கள் வடிவமைப்பாளர்களான ரமேஷ் மாறன், விஷ்ணு வரதன் ஆகியோருக்கு மதிப்புமிக்க 'மார்க் ஷண்ட்' விருதை வழங்கி பாராட்டினர்.


அங்கீகாரம் கிடைத்தது


இதுகுறித்து லண்டனில் இருக்கும் கூடலூர் பழங்குடியின வாலிபர் விஷ்ணுவரதன் 'தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-


லண்டானா உண்ணி செடிகள் மூலம் தயாரிக்கப்பட்ட கலைநயம் மிக்க பொருட்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து லண்டனில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமிலா மூலம் விருது வழங்க உள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


அதன்படி கடந்த மாதம் 25-ந் தேதி கூடலூரில் இருந்து லண்டன் புறப்பட்டு வந்தோம். இங்கிலாந்து மன்னரிடம் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதை அறிந்த உறவினர்கள், எங்கள் சமூக மக்கள் சந்தோசம் அடைந்து பாராட்டினர். மேலும் இந்த விருது மூலம் எங்கள் சமூகத்துக்கு அங்கீகாரம் கிடைத்து உள்ளது. இதை என்றைக்கும் மறக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


ஊத்வேகம் அளிக்கிறது


ரமேஷ் மாறன் கூறியதாவது:-


இங்கிலாந்தின் உயரிய விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மன்னர் சார்லஸ், ராணி கமிலா ஆகியோர் முதுமலைக்கு வர வேண்டுமென அழைப்பு விடுத்தோம். இதை கேட்ட அவர்கள், அதுகுறித்து ஆலோசிப்பதாக கூறினர். இந்த விருது கிடைத்து இருப்பதால் எங்கள் சமூகத்தை சேர்ந்த மற்றவர்களுக்கும் அங்கீகாரம் கிடைத்து உள்ளது. மேலும் இதுபோல் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என ஊத்வேகம் ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்