வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு செய்முறை கருவிகள் பெட்டி
கடலூர் மாவட்டத்தில் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு செய்முறை கருவிகள் பெட்டியை முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்.
அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் 'வானவில் மன்றம்" என்ற திட்டத்தை சமீபத்தில் திருச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து மாவட்டந் தோறும் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 275 அரசு நடுநிலை, 116 உயர்நிலை மற்றும் 129 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 520 பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் மூலம் 6 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 53,707 மாணவர்கள் பயன்பெற ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த 13 ஒன்றியங்களுக்கும் 30 கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
செய்முறை கருவிகள் பெட்டி
அவர்களுக்கு செய்முறை கருவிகள் பெட்டி வழங்கும் விழா நேற்று கடலூர் புனித வளனார் பள்ளியில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு செய்முறை கருவிகள் பெட்டியை வழங்கினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் தாமோதரன், இந்திய வளர்ச்சி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து கருத்தாளர்கள் அரசு பள்ளிகளுக்கு சென்று வானவில் மன்ற செயல்பாடுகளை தொடங்கினர். ஒரு கருத்தாளர் அதிகபட்சம் 60 பள்ளிகளுக்கு சென்று செய்முறை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் அறிவியல் இயக்க ஊழியர்கள், ஆசிரியர்கள், கருத்தாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.