குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; பழைய குற்றாலத்தில் குளித்த சுற்றுலா பயணிகள்

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் நேற்று மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர்.

Update: 2023-07-04 19:17 GMT

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் நேற்று மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர்.

தாமதமாக தொடங்கிய சீசன்

குற்றாலத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் தாமதமாக ஜூன் இறுதியில் தொடங்கியது. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மதியத்திற்கு மேல் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

நேற்று காலையில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்தது. ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்காக காத்திருந்தனர். காலை சுமார் 7 மணிக்கு மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மீண்டும் வெள்ளப்பெருக்கு

பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீர் விழத் தொடங்கியது. புலியருவி உள்பட 4 அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துக் கொண்டிருந்தனர். சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. வெயிலே இல்லை. குளிர்ந்த காற்று மிகவும் வேகமாக வீசியது.

இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக மதியத்திற்கு மேல் அனைத்து அருவிகளிலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக போலீசார் வெளியேற்றினர். இதனால் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மற்றும் குளிக்க காத்திருந்தவர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர். வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

பழைய குற்றாலத்தில் குளித்தனர்

பின்னர் மாலையில் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று புலியருவியிலும் சுற்றுலா பயணிகள் குளித்துச் சென்றனர்.

அருவிகளில் தண்ணீர் அதிகரிக்கும்போது போலீசார் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்காமல் நிறுத்தி வைத்துவிட்டு, தண்ணீர் குறையும்போது மீண்டும் குளிக்க அனுமதிக்கிறார்கள்.

மழை அளவு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதன்படி, காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பாபநாசம் -9, சேர்வலாறு -7, மணிமுத்தாறு -12, மாஞ்சோலை -30, காக்காச்சி -40, நாலுமுக்கு -52, ஊத்து -29, அம்பை -11, களக்காடு -1.

கடனாநதி -12, ராமநதி -13, கருப்பாநதி -10, குண்டாறு -44, அடவிநயினார் -40, ஆய்குடி -6, செங்கோட்டை -30, தென்காசி -6, சிவகிரி -7.

Tags:    

மேலும் செய்திகள்