ரேஷன் கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம்

விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2023-07-10 18:45 GMT

விழுப்புரம்

வேலைநிறுத்தம்

பட்டியல் இன பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க மறுக்கும், பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும், நியாயம் கேட்கும் ரேஷன் கடை பணியாளர்கள் மீது உள் விசாரணைக்கு உத்தரவிடும் என பணியாளர் விரோத போக்கை கடைபிடித்த நாகை மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு முழுவதும் மாநிலம் தழுவிய அளவில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தை சேர்ந்த சுமார் 500 பேர் நேற்று பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதன் காரணமாக மாவட்டத்தில் ஒரு சில ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க மாநில துணைத்தலைவர் சம்பத் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாவட்ட தலைவர் கோபிநாத் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் தனசேகரன் வரவேற்றார்.

இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் பழனிவேல், தட்சிணாமூர்த்தி, ஜெகதீஸ் வரன், இணை செயலாளர்கள் கதிர்வேல், குணசேகரன், துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ரஷீத் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்