தொப்பூரில் இருந்து கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 8¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்-டிரைவர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு

Update: 2022-11-29 18:45 GMT

தர்மபுரி:

தொப்பூரில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்ற 8¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

தர்மபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில், ஏட்டு வேணுகோபால், முதுநிலை போலீஸ் கோவிந்தன் ஆகியோர் சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், வெள்ளக்கல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். இதில் 174 மூட்டைகளில் 8 ஆயிரத்து 700 கிலோ ரேஷன் அரிசியும், 48 மூட்டைகளில் 2 ஆயிரத்து 400 கிலோ குருணை அரிசியும் இருந்தது. இதையடுத்து போலீசார் லாரி ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஆவல்நத்தம் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி என்பதும், தொப்பூரில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி, குருணை அரிசியை கடத்தி செல்ல முயன்றதும் தெரிந்தது.

டிரைவர் கைது

மேலும் இந்த கடத்தலில் லாரி உரிமையாளர்களான கிருஷ்ணகிரியை சேர்ந்த ஜெயக்குமார், மஞ்சுநாத் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் கந்தசாமியை கைது செய்தனர்.

மேலும் லாரியுடன் 8 ஆயிரத்து 700 கிலோ ரேஷன் அரிசி, 2 ஆயிரத்து 400 கிலோ குருணை அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் ரேஷன் அரிசி மூட்டைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தர்மபுரி கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. அரிசி கடத்தலில் தொடர்புடைய ஜெயக்குமார், மஞ்சுநாத்தை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்