பள்ளிக்கு சென்றபோது மயங்கி விழுந்த பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்? 2 பேரிடம் போலீசார் விசாரணை
பென்னாகரம்:
பள்ளிக்கு சென்றபோது மயங்கி விழுந்த பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்று 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பிளஸ்-2 மாணவி
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, இண்டூர் அருகே உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அவர் இண்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தினமும் அந்த மாணவி 3 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வந்தார்.
வழக்கம்போல் கடந்த 16-ந் தேதி மாணவி தனது சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். இண்டூர் பஸ் நிறுத்தத்தை தாண்டி சென்றபோது, திடீரென அவர் மயங்கி விழுந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மாணவியின் உறவினர், அவர் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பாலியல் பலாத்காரம்?
பின்னர் அவர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது, பள்ளிக்கு சைக்கிளில் சென்றபோது திடீரென தான் மயங்கி விழுந்ததாகவும், அப்போது தன்னை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் இண்டூர் போலீசில் புகார் அளித்தனர். பின்னர் அந்த புகார் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரித்தனர். மேலும் அவர் கூறிய அடையாளத்தை வைத்து, 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி மயங்கி விழுந்தபோது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.