கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
ரம்ஜான் பண்டிகை
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, பர்கூர், ஊத்தங்கரை, மத்தூர், ஜெகதேவி உள்பட பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள ராஜீவ் நகர், வெங்கடாபுரம், நமாஸ் பாறை ஆகிய இடங்களில் உள்ள ஈத்கா மைதானங்களில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது.
சிறப்பு தொழுகை
இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். அதேபோல் கிருஷ்ணகிரி- சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மசூதியில் பெண்கள் மட்டும் பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது.
இதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து மசூதிகள், பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் பங்கேற்ற முஸ்லிம்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டிதழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் முஸ்லிம்கள் பிரியாணி தயார் செய்து நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்து அளித்து மகிழ்ந்தனர்.
ஓசூர்
ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியில் நேற்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஓசூரில் தர்கா பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோல் மத்திகிரி, சூளகிரி, பாகலூர், பேரிகை பகுதிகளிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று. முடிவில் அனைவரும் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.