கைத்தறி சேலையில் ராமாயண போர்க்கள காட்சி-முதல்-அமைச்சரிடம் பரிசு பெற்ற நெசவாளருக்கு பாராட்டு
கைத்தறி சேலையில் ராமாயண போர்க்கள காட்சி-முதல்-அமைச்சரிடம் பரிசு பெற்ற நெசவாளருக்கு பாராட்டு
பரமக்குடி
பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இங்கு நெய்யப்படும் கைத்தறி நூல் சேலைகள், பம்பர் சேலைகள், பட்டு சேலைகள் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அவ்வாறு நெய்யப்படும் சேலைகளில் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது டிசைன்களில் சேலைகளை வடிவமைத்து பரமக்குடி கைத்தறி நெசவாளர்கள் அசத்தி வருகின்றனர். எமனேசுவரம் முத்துராமலிங்க தேவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி வரும் சரவணன் என்ற நெசவாளர் கைத்தறி நூல் சேலையில் ராமாயணத்தில் 10 தலையுடனான ராவணனை ராமன் வதம் செய்யும் காட்சி, போர்க்கள காட்சியை பல வண்ணங்களில் தத்துவமாக வடிவமைத்துள்ளார்.
சேலையின் பின்னணியில் 3 டி வடிவமாக லட்சுமணன், அனுமன், சுக்ரீவன் மற்றும் அரக்கர்கள் போர் செய்யும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த சேலை மாநில அளவில் நடந்த சிறந்த நெசவாளர்களுக்கான போட்டிக்கு அனுப்பப்பட்டது. அதில் சரவணனுக்கு முதல் பரிசு கிடைத்தது. அதற்காக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நெசவாளர் சரவணனை பரமக்குடி சரககைத்தறி உதவி இயக்குனர் ரகுநாத் மற்றும் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.