ரம்ஜான் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. திகழும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-10 05:56 GMT

கோப்புப்படம்

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியப் பெருமக்கள் ஒரு மாதம் நோன்பிருந்து, ஏழைகளின் பசி துன்பத்தைத் தாமும் அனுபவித்து, ஏழை, எளியோருக்கு உணவளித்து, எல்லோரும் எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட இறைவனைத் தொழுது, ரம்ஜான் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் இஸ்லாமிய மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு சிறுபான்மை மக்களின் நலன் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதையும்; கழகம் என்றென்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழும் என்பதையும் இந்த இனிய தருணத்தில் பெருமையோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

"அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள்; பிறருக்கு உதவி புரியுங்கள்: சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள்" என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதியேற்போம் என்று கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில், எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

புனித நூலான திருக்குர்ஆன் அருளப்பட்ட இந்த மாதத்தில், தமிழ் நாட்டில் தீமைகள் ஒழிந்து நன்மைகள் மீள, நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்