ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லிக்கு ராஜீவ் ஜோதி மத நல்லிணக்க யாத்திரை - செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லிக்கு ராஜீவ் ஜோதி மத நல்லிணக்க யாத்திரையை செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2022-08-10 13:21 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவிடம் உள்ளது. இந்த நினைவிடத்தில் இருந்து டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தியின் சமாதி அமைந்துள்ள வீர்பூமிக்கு ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் ராஜீவ் ஜோதி மதநல்லிணக்க யாத்திரை புறப்பட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ராஜீவ்ஜோதி மதநல்லிணக்க யாத்திரை தொடக்க விழா ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. கு.செல்வபெருந்தகை கலந்துகொண்டு ஜோதியை ஏற்றி வைத்து யாத்திரையை தொடங்கி வைத்தார்.

இதில் காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அளவூர் நாகராஜ், ராஜீவ்காந்தி நினைவிட சீரமைப்பு குழு உறுப்பினர் முருகானந்தம், ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் அருள்ராஜ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு வருகிற 20-ந்தேதி 78-வது பிறந்தநாளாகும். அவரது பிறந்த நாளையொட்டி இந்த மதநல்லிணக்க ஜோதி யாத்திரை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொடங்கி பல்வேறு மாநிலங்களின் வழியாக சாலை மார்க்கமாக சென்று டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தியின் சமாதி அமைந்துள்ள வீர்பூமியில் வருகிற 19-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்