ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் ராஜேந்திர சோழன் நினைவு வளைவு அமைக்க வலியுறுத்தல்
ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் ராஜேந்திர சோழன் நினைவு வளைவு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை தாங்கினார். ஆணையர் சித்ரா(பொறுப்பு) வரவேற்று பேசினார். துணை தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்து பேசினார். கூட்டத்தில், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, ஏரி, குளங்களை தூர் வாருதல் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவை மற்றும் வசதிகளை நிறைவேற்றுவது குறித்து கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில், நகராட்சியின் செலவினங்கள் உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசுகையில், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் ராஜேந்திர சோழன் நினைவு வளைவு அமைக்க வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குத்தகைதாரர்கள் நகராட்சி அனுமதியின்றி போலி ரசீது தயாரித்து வாரச்சந்தை உள்ளிட்ட இடங்களில் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். சந்தையை மறு குத்தகைக்கு ஏலம் விட வேண்டும். குத்தகைதாரர்கள் செலுத்த வேண்டிய குத்தகை பாக்கித் தொகையை வசூல் செய்ய வேண்டும். கீழக்குடியிருப்பு 3-வது மற்றும் 4-வது வார்டுகளில் உள்ள 2 மயானங்களுக்கு மின் விளக்குகள் வசதியும், கொம்மேடு பகுதியில் வேட்டைக்கார தெருவில் தார் சாலை மற்றும் மின்விளக்கு வசதியும் செய்த தர வேண்டும். தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும். கீழத்தெருவிற்கு நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். சுதந்திர தினத்தையொட்டி வீடு தோறும் தேசிய கொடியேற்றுவதற்காக, கவுன்சிலர்கள் தங்களுக்கு நகராட்சி வழங்கிய படிப்பணத்தை கொடுத்தனர்.