பராமரிப்பு இன்றி காணப்படும் ராஜராஜசோழன் பூங்கா

பராமரிப்பு இன்றி காணப்படும் ராஜராஜசோழன் பூங்கா

Update: 2022-10-30 19:32 GMT

1037-வது ஆண்டு சதயவிழா கொண்டாடப்படும் நிலையில் பராமரிப்பு இன்றி காணப்படும் ராஜராஜசோழன் பூங்கா புதுப்பொலிவு பெறுமா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சை பெரியகோவில்

தமிழக வரலாற்றில் பொற்காலம் என போற்றப்படும் சோழர் வரலாற்றில் மாமன்னன் ராஜராஜசோழன் சிறப்பிடம் பெற்று விளங்குகிறான். ராஜராஜசோழனால் பல கோவில்கள் கட்டப்பெற்றாலும் அவற்றில் தஞ்சை பெரியகோவில் தலைசிறந்த ஒப்பற்ற கோவிலாக திகழ்கிறது. கட்டிடக்கலை, சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

இந்த கோவில் உலக வரலாற்று சின்னங்களில் ஒன்றாக மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலை கட்டிய ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதயநாளில் பிறந்தார். அவரது பிறந்த நாளான ஐப்பசி சதய திருவிழா தஞ்சை பெரியகோவிலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ராஜராஜசோழன் பூங்கா

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சிலை அந்த கோவிலுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை இருக்கும் பகுதியில் பூங்கா அமைக்கப்பட்டு பராமரிப்பு இன்றி காணப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் 1000-வது ஆண்டு விழாவின் போது பல லட்ச ரூபாய் செலவு செய்து பூங்கா அமைக்கப்பட்டது.

புல்தளம் அமைக்கப்பட்டு பச்சைபசேல் என இந்த பூங்கா பார்க்க குளுமையாக இருந்தது. சிறுவர்கள் விளையாடுவதற்காக சறுக்குகள் அமைக்கப்பட்டது. பல்வேறு வகையான செடிகளும், பூக்களும் நடப்பட்டன. தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் மட்டும் மாநகராட்சி பணியாளர்கள் பூங்கா கேட்டை திறந்து பூங்காவில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வந்தனர்.

கஜா புயல்

இதனால் மிகவும் அழகாக இந்த பூங்கா காட்சி அளித்தது. விடுமுறை நாட்களில் மட்டும் சிறுவர்கள் விளையாடுவதற்கு வசதியாக பூங்கா நீண்ட நேரம் திறந்து இருக்கும். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பெரியகோவிலுக்கு சுற்றுலா வரக்கூடிய வெளியூர் மக்களும் தங்கள் குழந்தைகளுடன் இந்த பூங்காவில் பொழுது போக்கி வந்தனர்.

கஜா புயல் தாக்கியபோது ராஜராஜசோழன் சிலை நுழைவு வாயிலில் இருந்த பழமை வாய்ந்த மரம் முறிந்து விழுந்தது. இந்த மரம் நுழைவு வாயில் சுற்றுச்சுவரில் விழுந்தது. இதனால் நுழைவு வாயில் இரும்பு கேட் சுற்றுச்சுவரோடு சேர்ந்து பெயர்ந்து விழுந்தது. மரங்களை மட்டும் அகற்றிய மாநகராட்சி நிர்வாகம் உடைந்து விழுந்த இரும்பு கேட்டை உடனடியாக சீர் செய்யவில்லை.

இடிந்த சுற்றுச்சுவர்

இதனால் எந்த நேரமும் சோழன் சிலை பூங்கா திறந்து கிடக்கிறது. ஆடு, மாடுகள் பூங்காவின் உள்ளே சென்று அங்குள்ள அழகு செடிகள், புல் தரைகள் ஆகியவற்றை மேய்ந்து முற்றிலும் சேதப்படுத்தி விட்டது. இரவு நேரங்களில் மது அருந்துவோர் இந்த பூங்காவின் உள்ளே சென்று மது அருந்தும் பாராக மாற்றினர். இதையடுத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று இரும்பு கேட் சீரமைக்கப்பட்டு, பூங்காவும் பூட்டப்பட்டது. அதன்பிறகு இந்த பூங்கா மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவில்லை.

இந்த பூங்காவின் சுற்றுச்சுவர் ஆங்காங்கே இடிந்து விழுந்துள்ளது. இதனால் பூங்காவிற்குள் செல்வதற்கு வழி ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் வெளியூரில் இருந்து வரும் மக்கள் நிழலுக்காக இந்த பூங்காவிற்குள் சென்று அமர்ந்து இருப்பார்கள். ஆனால் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உடைந்து காணப்படுவதால் அதில் குழந்தைகளால் விளையாட முடியாத நிலை உள்ளது.

பராமரிப்பு இன்றி காணப்படும் பூங்கா

மாமன்னன் ராஜராஜசோழன் 1037-வது ஆண்டு சதயவிழா வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இப்படி சதயவிழா கொண்டாடப்படும் சூழ்நிலையில் ராஜராஜசோழன் சிலையுடன், அவரது பெயரில் உள்ள பூங்கா பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. தற்போது சதயவிழாவுக்காக சிலையை சுற்றிலும் உள்ள புற்கள், செடிகள் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு இருக்கிறது.

இது தற்காலிக நடவடிக்கை மட்டுமே. எனவே ராஜராஜசோழன் பூங்காவை சீரமைத்து குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான உபகரணங்களை அமைத்து புதுப்பொலிவு பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, தஞ்சை பெரியகோவிலை தினந்தோறும் ஏராளமான மக்கள் பார்த்து செல்கிறார்கள். வெளிநாட்டினர் கூட வரத் தொடங்கிவிட்டனர். சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவை பார்த்து விட்டு, இத்தனை சிறப்பான கோவிலை கட்டியை ராஜராஜ சோழன் பூங்காவை ஏன் பராமரிக்கவில்லை என்ற ஆதங்கத்துடன் செல்கிறார்கள். விடுமுறை நாட்களில் இங்கு தஞ்சை மக்கள் குடும்பத்தோடு வருவார்கள். இப்போது பூங்காவின் நிலையை பார்த்து மக்கள் வேதனை அடைந்து உள்ளனர். எனவே இந்த பூங்காவில் உள்ள செடிகளை அகற்றி, இடிந்த சுற்றுச்சுவர்களை கட்டி முறையாக பராமரிக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்