கிராம ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்

தர்மபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

Update: 2022-05-23 16:07 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள்் கலந்து கொண்டு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவிதொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குவோர், தூய்மை பணியாளர்கள் திரண்டு வந்து அளித்த கோரிக்கை மனுவில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் 500- க்கும் மேற்பட்டோர் கடந்த 2000- ம் ஆண்டு முதல் தூய்மை பணி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு மற்ற மாவட்டங்களில் வழங்குவதைப் போல் ரூ.4,200 மற்றும் ரூ.4,400 என ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். எங்களுக்கு பணிப்பதிவேடு ஏற்படுத்த வேண்டும். எங்களில் விடுபட்டவர்களின் விவரங்களை தமிழ்நாடு கிராம ஊராட்சி மேம்பாட்டு இணையதளத்தில் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வீட்டு மனை பட்டா

மிட்டா நூலஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், வத்தல்மலை ரோடு திருமலை கவுண்டன் கொட்டாய் பகுதியில் சாலையோரத்தில் 50 ஆண்டுகளாக விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வருகிறோம். இந்த சிலையை அகற்ற முயற்சி நடப்பதாக தெரிகிறது. எனவே இந்த சிலையை அகற்ற கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

நல்லம்பள்ளி அருகே சவுளுபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், நாங்கள் 30- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்திய கலெக்டர் திவ்யதர்சினி அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்