நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை:வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-09-23 18:45 GMT

வைகை அணை

தென்மேற்கு பருவமழை தொடங்கி 3 மாதங்கள் ஆன நிலையில் தேனி மாவட்டத்தில் இதுவரை போதிய அளவு மழை பெய்யவில்லை. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரி, அணைகளில் நீர்வரத்து குறைந்தது. இதில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர்வரத்து முற்றிலும் நின்றுவிட்டது.

முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கப்படும்போது வைகை அணைக்கு நீர்வரத்து ஏற்படும். கடந்த 2 மாதங்களாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 400 அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் வைகை அணைக்கு கடந்த சில நாட்களாக சராசரியாக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கம்பம், போடி பகுதிகளில் கன மழை பெய்தது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 333 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 425 கனஅடியாக அதிகரித்தது. வைகை அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 69 கனஅடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 48.36 அடியாக உள்ளது வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசன வசதி பெறும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திடீரென நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயரத்தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்