செந்தில் பாலாஜி உட்பட 4 புதிய அமைச்சர்கள் இன்று மாலை பதவி ஏற்பு
தி.மு.க. இளைஞரணி செயலாளர்.. எம்.எல்.ஏ.. அமைச்சர்.. துணை முதல்-அமைச்சர்... உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்தபாதை.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு அமைந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 35 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்கும்போதே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது.
இந்தநிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று முக்கிய அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி எப்போது வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கோரிக்கை வலுத்து இருக்கிறதே தவிர பழுக்கவில்லை என்று பதில் அளித்திருந்தார்.
இந்த சூழலில் அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பிய பின்னர் இதே கேள்விக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றம் இருக்கும்... ஏமாற்றம் இருக்காது... என்று பதில் அளித்தார். இதனால் அமைச்சரவை மாற்றம் விரைவில் இருக்கும் என்றும், உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்-அமைச்சராவார் என்றும் கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்தநிலையில் , அமைச்சரவை மாற்றம் குறித்து இன்று கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார். அதன்படி, தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் அளித்தார்.
இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.
தற்போது அமைச்சர்களாக இருக்கும் செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
அதற்கு பதில் செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாகிறார்கள்.
6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடிக்கு வனத்துறையும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான தங்கம் தென்னரசுவுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் நலத்துறையும், சுற்றுச்சூழல் அமைச்சரான வி.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரான கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டுத்துறையும், வனத்துறை அமைச்சரான மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கு காதி மற்றும் பால்வளத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய அமைச்சர்களுக்கான பதவி ஏற்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதனிடையே புதிய அமைச்சர்களாக பதிவியேற்கும் 4 பேருக்கும் என்னென்ன துறை ஒதுக்கப்பட உள்ளது என்பது குறித்து அவர்கள் பதவியேற்றதும் ராஜ்பவன் மூலம் அறிவிக்கப்பட உள்ளது. அமைச்சரவையில் புதிதாக இடம்பெறும் செந்தில்பாலாஜி கரூர் தொகுதியில் இருந்தும், கோவி.செழியன் திருவிடைமருதூர் தொகுதியில் இருந்தும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
கோவி.செழியன், தமிழக அரசின் தலைமை கொறடாவாகவும் செயல்பட்டு வருகிறார். ராஜேந்திரன் சேலம் வடக்கு தொகுதியில் இருந்தும், ஆவடி நாசர் ஆவடி தொகுதியில் இருந்தும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். இதனிடையே அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ராமச்சந்திரனுக்கு, அரசு தலைமை கொறடா பதவி வழங்கப்பட்டுள்ளது.
துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின்: கடந்து வந்தபாதை...
2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த ஊராட்சி சபைக் கூட்டங்களைப் பல மாவட்டங்களில் திறம்பட நடத்தினார் உதயநிதி. தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றி தி.மு.கழகம் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளில் வெல்ல உதயநிதியின் பிரசாரத்துக்கு குறிப்பிடத்தக்கப் பங்குண்டு.
2019-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி கழக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்றபோது கழகம் அதிகாரத்தில் இல்லாதபோதும், இளைஞர் அணியினரைக் கொண்டு மக்கள் பணிகளைச் செய்ய முடிவெடுத்தார். மாநிலம் முழுவதும் தூர்ந்து கிடந்த நீர்நிலைகளைத் தூர்வாரவேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். நீட் தேர்வுக்கு எதிராக, கழக மாணவர் அணியுடன் இணைந்து தொடர் போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தார்
2021 சட்டசபை தேர்தலில் சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் தரப்படவில்லை. 2022-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதிதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம் பெற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் முதல்முறையாக கடந்த 2006 - 11ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சர் ஆக மு.கருணாநிதி இருந்தார். உடல் குறைவு காரணமாக கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் ஆக பொறுப்பேற்றார். மே 29ம் தேதி 2009ம் ஆண்டு துணை முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் 2011 ம் ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சி முடியும் வரை பொறுப்பில் இருந்தார்.
தமிழகத்தின் இரண்டாவது துணை முதல்-அமைச்சர் ஆக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். இதன்படி கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க.) தலைமையிலான அமைச்சரவையில் துணை முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.