ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் விடுதலை
ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 5-ம் தேதி 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில் ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்டோ, பேட்ரிக்நாதன் ஆகிய 2 பேருக்கு சொந்தமான விசைப்படகுகளில் ரிபாக்சன், ராஜபிரபு, அரவிந்த் பாண்டி, ராபின்ஸ்டன், முனீசுவரன், பிரசாந்த், ஆரோக்கியம், பெட்க் நாதன், யோபு, ஜான் எமர்சன், பரலோக மெக்டன் வினித், அருள் பிரின்ஸ்டன், அந்தோணி லிப்சன், நிசாம் ஆகிய 14 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர்.
இவர்கள் 14 பேரும் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் அங்கு ரோந்து வந்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து கைது செய்தனர். 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து மீனவர்களை இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 14 மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத் தொகையை செலுத்தினால் மீனவர்கள் உடனே விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் இல்லையெனில் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.