எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம்: பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்

வடசென்னையில் மேலும் ஒரு அனல்மின் நிலையத்தை அமைத்தால் அப்பகுதி பொதுமக்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

Update: 2024-12-19 08:44 GMT

கோப்புப்படம் 

சென்னை,

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பாக சென்னை எண்ணூரில் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறும் என தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

லட்சக்கணக்கான பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்கக் கூடிய வடசென்னையில் ஏற்கனவே 3,330 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பல்வேறு அனல் மின் நிலையங்கள் இயங்கிவரும் நிலையில், தற்போது கூடுதலாக 660 மெகாவாட் அளவிற்கான அனல்மின் நிலையத்தை அமைக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எண்ணூர் மற்றும் மணலி ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் அனல் மின் நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ரசாயன ஆலைகள் என அபாயகரமான தொழிற்சாலைகள் பயன்பாட்டில் இருக்கும் வடசென்னையில் மேலும் ஒரு அனல்மின் நிலையத்தை அமைத்தால் அப்பகுதி முழுவதும் பொதுமக்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வடசென்னையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகளால் பக்கிங்காம், கொசஸ்தலை மற்றும் எண்ணூர் முகத்துவாரம் ஆகிய நீர்நிலைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கையின் அடிப்படையில் தற்போது பொதுமக்களிடம் கருத்துக் கேட்பது அவர்களை முழுக்க முழுக்க ஏமாற்றும் செயலாகும்.

எனவே, வடசென்னைப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு, இயற்கை வளங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை உடனடியாக ரத்து செய்வதோடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்