மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: ஈரோட்டில் பயனாளிக்கு மருந்துப் பெட்டகம் வழங்கினார் மு.க.ஸ்டாலின்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டு கோடியாவது பயனாளிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார்.
சென்னை,
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்
பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகள் வழங்கும் உன்னதமான திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கடந்த 5.8.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில் முதல் பயனாளியான சரோஜாம்மாளுக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தேவையான மருந்துகள் வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள் (Palliative Care), இயன்முறை மருத்துவ சேவைகள் (Physiotherapy) மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டையாலிசிஸ் செய்துகொள்வதற்கான (CAPD) பைகள் வழங்குதல் போன்ற ஏழை எளிய மக்களுக்கு தேவையான அனைத்து சுகாதார சேவைகளையும் களப்பணியாளர்கள் மூலம் பயனாளிகளின் இல்லங்களிலேயே வழங்கப்படுகின்றன.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பெண் சுகாதார தன்னார்வலர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஆஷா பணியாளர்கள் போன்றவர்கள் இச்சேவைகளை வழங்கி வருகிறார்கள். இத்திட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களில், ஒரு இயன்முறை பணியாளர் மற்றும் ஒரு நோய் ஆதரவு செவிலியர் அடங்கிய குழு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் சேவைகளை வழங்கி வருகின்றன.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இரண்டு கோடியாவது பயனாளி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டம், நஞ்சனாபுரத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டு கோடியாவது பயனாளியான நஞ்சனாபுரத்தைச் சேர்ந்த சுந்தராம்பாளின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார். தொடர்ந்து, இரண்டு கோடியே ஒன்றாவது பயனாளியான வசந்தாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு வழங்கப்படும் இயன்முறை சிகிச்சை முறைகளை பார்வையிட்டு, சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் முத்துசாமி, மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் ப. செல்வராஜ், ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.