கடந்த ஆண்டை விட நவம்பர் மாதத்தில் மழை குறைவு ஏரி, குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலை
கடந்த ஆண்டை விட நவம்பர் மாதத் தில் மழை குறைந்துள்ளதால் ஏரி, குளங்கள் நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்கினாலே அனைவரின் பார்வையும் கடலூர் பக்கம் தான் திரும்பும். ஏனெனில் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக கடலூர் உள்ளது.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. அதாவது கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் நவம்பர் 26-ந் தேதி வரை சராசரி மழை அளவு 305.2 மி.மீ. ஆகும். ஆனால் தற்போது சராசரியை விட அதிகமாக இதுவரை 316 மி.மீ மழை பெய்துள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது குறைந்த அளவே மழை பெய்துள்ளது. ஆம், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் நவம்பர் 26-ந் தேதி வரை 537 மி.மீ. மழை பெய்திருந்தது.
ஏரி, குளங்கள் நிரம்பவில்லை
இருப்பினும் சராசரி மழை அளவைவிட அதிக அளவு மழை பெய்தும், ஒருசில ஏரி, குளங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. அதாவது மாவட்டத்தில் 428 ஏரி, குளங்கள் உள்ளன. அவற்றில் 21 ஏரி, குளங்கள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மீதமுள்ள 26 நீர்நிலைகளில் 75 சதவீதத்திற்கு மேலும், 40 ஏரி, குளங்களில் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரையும், 104 நீர்நிலைகளில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையும், மீதமுள்ள 19 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு குறைவாகவும் தண்ணீர் உள்ளது. அதிலும் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் உள்ள 6 ஏரிகளில், ஒரு ஏரி கூட முழுமையாக நிரம்பவில்லை. மேலும் அதில் ஒரு ஏரியில் முற்றிலும் தண்ணீர் இல்லை.
தூர்வாராத வாய்க்கால்கள்
இதற்கெல்லாம் காரணம், கடந்தசில ஆண்டுகளாக நீர்வரத்து வாய்க்கால்களை அதிகாரிகள் தூர்வாரி முறையாக பராமரிக்கவில்லை. இதனால் மழைக்காலத்தில் வாய்க்கால்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போதிலும், அவை ஏரி, குளங்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. இதேபோல் ஏரி, குளங்களையும் பராமரிக்காததால், அவற்றில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. மேலும் பல ஏரிகளில் உள்ள மதகுகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், தண்ணீர் தொடர்ந்து வெளியேறிக் கொண்டு தான் இருக்கிறது.
இதனால் கிணற்று பாசனத்தை நம்பி தான் விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுபற்றி கடலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
போதிய மழை இல்லை
விருத்தாசலம் தொரவளூர் பூமாலை:- கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது அதிகளவு மழை பெய்தது. இதனால் விருத்தாசலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பின. பல மாதங்கள் நீர்வரத்து வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் இந்த வருடம் இதுவரை போதிய அளவில் மழைப்பொழிவு இல்லை. இதனால் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் குறைந்தளவே தண்ணீர் செல்கிறது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினால் தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். நீர் நிலைகளும் வேகமாக நிரம்பும். ஆனால் தற்போது பெய்த மழை சிறிது காலத்திற்கு கூட தாங்காது. இதோடு மழை நின்று விட்டால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடும். மேலும் இந்தாண்டு பயிர் சாகுபடியை தொடங்க முடியாத சூழல் உருவாகும்.
தண்ணீர் தட்டுப்பாடு
விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.எம்.சேகர்:- சிதம்பரத்தில் ஒரே நாளில் 30 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. மேலும் தொடர் மழையால் சிதம்பரம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. கிராம பகுதிகளில் உள்ள பெரும்பாலான குளங்கள் மற்றும் குட்டைகள் முழுமையாக நிரம்பி வழிகின்றன. இதனால் இந்த ஆண்டு எவ்வித தண்ணீர் தட்டுப்பாடும் இன்றி பயிர் சாகுபடி செய்யலாம். வடகிழக்கு பருவமழை முடியாத பட்சத்தில், தொடர்ந்து மழை பெய்தால் அனைத்து ஏரிகளும் நிரம்பி விடும். அதனால் இயற்கை வளங்களும் செழிக்கும்.
கிணற்று பாசனம்
விவசாயி வீரமுத்து:- வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும், தொடர்ந்து கனமழை பெய்தது. ஆனால் திட்டக்குடி பகுதியில் உள்ள பெரும்பாலான நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால், மழைநீர் அனைத்தும் ஏரி, குளங்களுக்கு செல்லவில்லை. அதுபோல் ஏரிகளும் தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அரங்கூர் ஏரி மற்றும் அருகில் உள்ள குளங்கள் வறண்டு காணப்படுகிறது. சிறிய சிறிய பள்ளங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் நடப்பு பருவத்தில் பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. அதனால் கிணற்று பாசனத்தை நம்பி தான், இனி சாகுபடி பணியை தொடங்க உள்ளோம். ஆனால் கிணறுகளிலும் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதால், குறுகிய கால பயிர் தான் சாகுபடி செய்ய முடியும்.
நிரம்பாத அரங்கூர் ஏரி
அரங்கூர் ஆறுமுகம்:- மழை பெய்தும், அரங்கூர் ஏரி நிரம்பவில்லை. கடந்த ஆண்டு நிரம்பிய ஏரி, அதன் பிறகு ஏரிக்கு வரக்கூடிய வாய்க்கால்கள் அனைத்தும் தூர்ந்து போனதால், இந்தாண்டு போதிய அளவு தண்ணீர் வரத்து இல்லை. வருண பகவான் கருணை காட்டினால் தான், இனி ஏரி நிரம்பும். இல்லையெனில் நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு செல்வதுடன், குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. அதனால் வருங்காலங்களிலாவது ஏரி, குளங்கள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும்.