மாமல்லபுரம் குடைவரை மண்டபத்தில் ஏற்பட்ட விரிசலால் மழைநீர் கசிவு; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் குடைவரை மண்டபத்தில் ஏற்பட்ட விரிசலால் மழைநீர் கசிவு ஏற்படுகிறது. அதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
விரிசல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பராம்பரிய நகரமாக திகழ்கிறது. இதனை கண்டுகளிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனை மத்திய தொல்லியல் துறை பராமரித்து பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில் அர்ச்சுனன் தபசுக்கு அருகில் உள்ள குடைவரை மண்டபத்தின் தூண் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல் வழியாக மழை நீர் கசிவதால் அந்த மண்டபத்தை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகிறார்கள்.
மேலும் விரிசல் பகுதி எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்துடன் சுற்றுலா பயணிகள் அங்கு சுற்றி பார்த்துவிட்டு செல்கின்றனர். எனவே தொல்லியல் துறை நிர்வாகம் குடைவரை மண்டபத்தில் உள்ள விரிசல் பகுதியை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.